மாதம் ரூ.1000 கொடுக்காங்க! ஆனால் ஆயிரம் ரூபாய் மட்டும் நம்மை முன்னேற வைத்துவிடுமா? நிர்மலா சீதாராமன்
சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் வேறு கட்சியில் சேரக்கூடாது என மிரட்டப்படுகிறார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாதம் மாதம் கொடுக்கப்படும் இந்த ஆயிரம் ரூபாய் மட்டும் நம்மை முன்னேற வைத்துவிடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடந்தது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அப்போது நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

பரவலாக நிறைய பேர் பேசிக்கொள்கிறார்கள். இன்னைக்கு இங்கு இருக்கக் கூடிய கட்சி நம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. இதேபோல் பிரதமர் மோடியும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னன்ன செய்திருக்கிறார் என்றும் எடுத்து கூறினேன். ஆனால் இவ்வளவு செய்யும் மோடி ஐயா, நான் தான் இதை உங்களுக்கு கொடுத்தேன். எங்கள் கட்சியில் தான் நீங்க இருக்க வேண்டும் என்று ஒருநாள் கூட சொன்னதில்லை.
ஆனால் இங்கே ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு, வேற கட்சியில் போய் சேர்ந்துவிடுவியா? பார்த்துறாலாம் உன்னை.. என நம் ஊரில் இருப்பவர்களை வைத்து சொல்ல வைக்கின்றனர். சொல்ல வைக்கிறாங்களா? இல்லையா? எங்க கிட்டது எதுவும் கேட்காதீங்க... கேமரா வேற இருக்கு.. நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்துருவாங்க என்று நினைக்கிறீங்களா.. என்று அங்கிருந்தவர்களை பார்த்து கேட்டார்.
தமிழ்நாட்டில் சாராயம் தான் வந்துகொண்டிருந்தது.. ஆனால் இப்போது போதைப் பொருளும் வந்துவிட்டது. நம்ம பிள்ளைங்களை காப்பாற்ற வேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம். அந்த ஆயிரம் ரூபாய் மட்டும் நம்மை முன்னேற வைத்துவிடுமா?.. இவ்வாறு அவர் பேசினார். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வழங்கப்படுகிறது. ஒரு கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டம் மேலும் விரிவுப் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 1 கோடியே 15 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெற்றனர். தற்போது மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அவர் செல்லும்போதே தமிழக அரசியல் நிலவரங்களை கவனிப்பேன் என்று கூறிச் சென்றார். மேலும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் எங்கள் நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று கூறினார். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆகும் வகையில் பாஜக உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பெரிய கட்சியாக பாஜகவை பலப்படுத்த தீவிமாக பணிகள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications