வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்ய சென்னை வரும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.. அண்ணாமலை பரபர பிளான்!
சென்னை: மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னைக்கு வருகை தந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் என 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் இந்த வெள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு, ரூ.5,060 கோடியை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்னை வந்தார். ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன் பின்னர் மத்திய அமைச்சருக்கு புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் வீடியோ காட்சி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன். சென்னை மீண்டு வர தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
ராஜ்நாத் சிங் நேற்று சென்னை வந்திருந்து பாதிப்புகளை பார்வையிட்ட நிலையில், முதற்கட்டமாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அத்துடன் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடி மத்திய அரசு விடுவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் ஜல்சக்தித்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வர உள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், காஞ்சிபுரம் மாவட்ட வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வருகிறார் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
சென்னைக்கு வெள்ள பதிப்புகளை பார்வையிட வரும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால், தொழில் முனைவோர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அவர்களை அழைத்துச் சென்று ராஜீவ் சந்திரசேகரிடம் அண்ணாமலை கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications