பட்டா.. ஆட்சேபனைக்குரிய, ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டு வசிப்போருக்கும் பட்டா தேவை: பெயிரா
சென்னை: ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசின் மகத்தான திட்டமான ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களுக்கு இலவச பட்டா வழங்கும் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தும், மேலும் அதில் சில மாற்றங்கள் செய்யக் கோரியும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இலவச பட்டா திட்டம்
அந்த கடிதத்தில், தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கும், அதேபோல மாவட்ட தலைநகரங்களில் 16 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 8 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை திட்டத்தின் கீழ், பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையாணையை ஒரு முறை மாத்திரம் தளர்த்தி, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் இந்த ஆண்டு 5 லட்சம் பேருக்கு விலையில்லா (இலவச) பட்டா வழங்கப்படும்" என்கிற திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இத்திட்டம் புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி குடி இருக்கும் சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாகவும் அவர்களின் சொத்துக்களுக்கு சட்டரீதியான அங்கீகாரமும் கிடைக்கும் ஆகவே மக்களுக்கான இந்த மகத்தான இலவச பட்டா வழங்கும் ஆகச்சிறந்த அரும்பெரும் திட்டத்தை மேற்கண்ட எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மனம் திறந்து பாராட்டி வரவேற்று, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கிறது.
அதே சமயம் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனவும் அறிவித்திருக்கிறது.
நீர்நிலைகள், மேய்க்கால் நிலங்கள்
இத்தருணத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசாணை எண்:465 நாள்:27.11.2018 ஆம் ஆண்டு 2018-2019-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்குகளான நீர்நிலைகள் மற்றும் மேய்க்கால், ஆம் மந்தைவெளி மற்றும் சாலைகள் ஆகிய புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்கும் பொருட்டு, இதில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அதே பகுதியில் உள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று நிலங்களை தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஆகவே மேற்கண்ட அரசாணை நிலை எண்.465 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, கனிவுடன் பரிசீலித்து, அரசு சட்ட சபையில் தாக்கல் செய்துள்ள ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் சென்னை பெருநகர பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும், பிற பகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவினை, பொத்தம் பொதுவாக ஐந்து ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்.
ஆட்பேசமற்ற புறம்போக்கு நிலங்கள்
அதேபோன்று மேற்கண்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் வீடு கட்டி குடியிருக்கும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும், ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்திடும் வகையில் தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு, உரிய வழிவகை செய்ய வேண்டும்" என அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications