அதிகாரிகள் கூட பாஸ் ஆக மாட்டாங்க! யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: மிக மிக கடினம் என தேர்வர்கள் வேதனை
சென்னை: இந்தாண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அனுபவமுள்ள அதிகாரிகளுக்குக் கூட கேள்விகளுக்கு பதிலளிக்க சிரமப் படுவார்கள் என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். யுபிஎஸ்சி தேர்வு என்றாலே கேள்விகள் கணிக்க முடியாத அளவுக்கு தான் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நடந்த தேர்வு கணிக்க முடியாத தன்மையை முற்றிலும் வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதாக தேர்வர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்காக யுபிஎஸ்சி தேர்வு நடத்துகிறது. 933 காலியிடங்களுக்காக யுபிஎஸ்சி அண்மையில் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

மிகவும் கடினமானதாக இருந்ததாக
முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டமாக இந்த தேர்வு நடைபெறும் நிலையில், முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. சுமார் 8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு மிகவும் கடினமானதாக இருந்ததாக தேர்வர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இது பெரும் விவாதத்தைத் சமூக வலைத்தளங்களில் தூண்டியுள்ளது.
தேர்வு மையங்களிலிருந்து வெளியே தேர்வர்கள் சிலர் கூறுகையில், சமீப கால வரலாற்றில் நடைபெற்ற மிகக் குழப்பமான தேர்வுகளில் இதுவும் ஒன்று என்றனர். பொது அறிவுத் தாள் 1 மிகவும் கடினமாக இருந்தது என்று சண்டிகரில் உள்ள பயிற்சி மையத்தை சேர்ந்த ஷேகர் தத் கூறினார். ராய்பூரின் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவனிஷ் சரண் இதே கருத்தை வெளியிட்டார்.
அனுபம் குப்தா என்ற தேர்வர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறுகையில், "இப்போதே விட்டுவிடலாமா, அல்லது இன்னொரு முறை முயற்சி செய்யலாமா?" என்று எண்ண தோன்றுகிறது என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். 2022 முதல், தேர்வு எழுதி வரும் அவர், தனது கனவை கைவிடும் எண்ணத்தில் இருப்பதாக கூறியுள்ளார். குப்தா மட்டுமல்ல, பலர் இதே மனநிலையில் இருந்ததாக பதிவிட்டு வருகிறார்கள்.
யுபிஎஸ்சி தேர்வு ஆலோசகர்
ராய்ப்பூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், எக்ஸ் தளத்தில், "யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 2026: இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடினமானது" என்று பதிவிட்டுள்ளார். கடினத்தன்மை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அணுகும் திறனை பொறுத்தது என்றாலும், "தேர்வில் வெற்றி பெற்று சிறந்த தரவரிசை பெற்றவர்கள் கூட இந்த கேள்வித்தாள் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது எனக் குறிப்பிட்டதாக யுபிஎஸ்சி தேர்வு ஆலோசகர் ஷேகர் தத் கூறினார்.
கேள்விகள் எப்படி வரும் என கணிக்க முடியாத தன்மை என்பது எப்போதும் யுபிஎஸ்சியின் நடத்தும் தேர்வுகளின் அடையாளமாக உள்ளது. எனவே, தேர்வுகளில் சில ஆச்சர்யங்கள் இருக்கும் என்பதை உணர்ந்தே, தேர்வு அரங்குக்குள் தேர்வர்கள் செல்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டின் பொது அறிவு வினாத்தாள், கணிக்க முடியாத தன்மையை முற்றிலும் வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டதாக பல தேர்வர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
5 கேள்விகளுக்கு 6 நிமிடம்
"UPSC என்பதற்கு பதிலாக 'Unprecedented Public Service Commission' என்று சொல்லலாம்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் சில தேர்வர்கள். மற்ற சிலர் தங்களின் ஏமாற்றத்தை மீம்ஸ்களின் மூலம் வெளிப்படுத்தினர். கேள்விகளுக்கு 120 நிமிடங்களில் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில், ஒவ்வொரு கேள்விக்கும் தேர்வர்களுக்கு சராசரியாக 1 நிமிடம் 12 விநாடிகள் மட்டுமே இருந்தது. அதாவது, ஐந்து கேள்விகளுக்கு வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே நேரம் இருந்தது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகட்டிவ் மார்க் வழங்கப்படும் என்பதாலும் நேரமின்மையும் கடும் நெருக்கடியாக இருந்தாதாக தேர்வர்கள் கூறினர். அதிகமான வாசிப்பு, தகவல்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் நினைவில் வைத்திருக்கும் திறனை தேர்வர்களிடம் இரண்டு மணி நேரத்திற்குள் யுபிஎஸ்சி எதிர்பார்க்கிறதா என்ற கேள்வியும் தேர்வர்கள் இடையே எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications