நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் பிப்ரவரி 22இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இன்று காலை 7 மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் விஜய், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சியின் 122ஆவது வார்டில் முதல்வர் ஸ்டாலினின் வாக்கு உள்ளது. இதனிடையே இன்று காலை 9.30 மணியளவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடிக்கு வந்தார். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வாக்களிக்க வந்தார்.

வரிசையில் நின்று வாக்களித்தார்
எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், முதல்வர் ஸ்டாலின் வாக்களிக்கச் சென்றார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் சிலர் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் வரிசையில் நின்று முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து துர்கா ஸ்டாலினும் வாக்களித்தார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இன்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். காந்தியடிகள் கூறியது போல உள்ளாட்சி என்பது சிறு குடியரசு. அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்த உள்ளாட்சி மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். எனவே, இதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

21 மாநகராட்சிகளிலும் திமுக வெல்லும்
தோல்வி பயம் காரணமாகவே, அதை மூடி மறைக்கக் கோவையில் அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் திமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும். கடந்த 9 மாத கால ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளோம். இந்த முறை தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெல்லும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications