‘உருட்டுகளும் திருட்டுகளும்’.. Report Card உடன் புதிய பிரச்சார திட்டத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பிரசார முன்னெடுப்பை தொடங்கி வைத்துள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, திமுக அரசை விமர்சிக்கும் பிரச்சார திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பிரச்சாரம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முதல் புதுக்கோட்டையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், "திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக" என்ற அதிமுகவின் புதிய பிரசார திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உருட்டுகளும் திருட்டுகளும்
இந்த திட்டத்தின் மூலம், கடந்த தேர்தலின் போது, திமுக அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய, மக்களுக்கு ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.
திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் முன்வைத்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார். இந்த நிகழ்வின்போது, "பதில் சொல்லுங்க அப்பா" என்ற தலைப்பில், பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொளியையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
வர வேண்டிய நேரத்தில் வரும் - எடப்பாடி
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "2026 தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை முடிந்துவிட்டது. திமுகவில் தான் மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கிறார்கள்." என்றார். மேலும், திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என குற்றம் சாட்டிய அவர், நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர வேண்டிய நேரத்தில் வரும். கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications