ஆம்புலன்ஸ் கதவை உடைத்து.. ரத்தத்துடன் வெளியே பாய்ந்த அமெரிக்க இளைஞர்.. சென்னையில் 'பரபர' சம்பவம்
ஆம்புலன்ஸ் கதவை உடைத்து தப்பியது எதற்காக என அமெரிக்க இளைஞர் கூறிய காரணத்தை கேட்டு போலீஸாரே வாய்விட்டு சிரித்துவிட்டனர்.
சென்னை: சென்னையில் ஆம்புலன்ஸ் கதவை உடைத்துக்கொண்டு வெளியே குதித்த அமெரிக்க இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட ஓடியதை பார்த்து பொதுமக்கள் பயத்தில் உறைந்து போயினர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணாத்தைச் சேர்ந்தவர் கியானி மார்செல்லோ (26). இவர் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு அவருடன் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில், சென்னை இளைஞருக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தில் மது விருந்து
நண்பனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கியானி மார்செல்லோவும் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். அவர் தங்குவதற்காக பெரிய மேட்டில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் ஒரு அறையை சென்னை இளைஞர் புக் செய்து கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருமணத்தில் கலந்துகொண்ட தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்திருக்கிறார் மாப்பிள்ளை. இந்த விருந்தில் மார்செல்லோவும் பங்கேற்று மது அருந்தியிருக்கிறார்.

மண்டை உடைந்தது
அமெரிக்க மதுபானங்களை குடித்து பழகிய கியானி மார்செல்லோ, திடீரென நம்மூர் சரக்கை அடித்ததால் மப்பு தலைக்கு மேல் ஏறியிருக்கிறது. இதை பார்த்த மாப்பிள்ளையின் நண்பர்கள், அவரை ஒரு ஆட்டோவை அமர்த்தி அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அவரை அனுப்பியுள்ளனர். அதன்படி, ஓட்டலுக்கு தள்ளாடியபடி வந்த கியான் மார்செல்லோவை அங்கிருந்தவர்கள் அவரது அறைக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். இந்நிலையில், அறையை விட்டு வெளியே ஓடி வந்த கியான் மார்செல்லோவுக்கு தலையில் ரத்தம் பீறிட்டு வந்தது.

ஆம்புலன்ஸ் கதவை உடைத்து..
போதையில் பாத்ரூமில் விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓட்டல் ஊழியர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து கியானை அதில் ஏற்றினர். இந்நிலையில், ஆம்புலன்ஸ் ரிப்பன் கட்டிடம் அருகே நெருங்கிய போது, திடீரென கதவை உடைத்துக் கொண்டு வெளியே பாய்ந்தார் கியான். தலையில் ரத்தம் வழிய வழிய நடுரோட்டில் ஓடிய அமெரிக்க இளைஞரை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கிட்னியை திருடிவிடுவார்களோ..
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த தகலவின் பேரில், போலீஸார் அவரை தேடியுள்ளனர். அப்போது அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பைக் பார்க்கிங்கில் மறைந்திருந்த கியானை போலீஸார் பிடித்தனர். விசாரணையின் போது அவர் கூறியது போலீஸாருக்கே சிரிப்பை வரவழைத்து. அதாவது அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் பார்க்கவே ஆடம்பரமாக இருக்குமாம். ஆனால், இங்கு ஆம்புலன்ஸ் அவ்வாறு இல்லாததால், தன்னை கடத்திக் கொண்டு போய் கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளை எடுக்க போகிறார்களோ என்ற பயத்தில் வண்டியில் இருந்து குதித்ததாகவும் கியான் மார்செல்லோ வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரை எச்சரித்த போலீஸார், கியானை மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications