ஈரானிடம் தோல்வி அடைந்த அமெரிக்கா? ஹார்முஸில் இருந்து 'டாடா' காட்டும் ட்ரம்ப்.. எல்லாம் முடிந்தது?
சென்னை: "நாங்க நினைச்சதை சாதிச்சுட்டோம்... கிளம்புறோம்!" - இப்படித்தான் இருக்கிறது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் ட்ரூத் சோஷியல் (Truth Social) பதிவு. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக ட்ரம்ப் அறிவித்திருப்பது, உலகரங்கில் பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஈரானிடம் அமெரிக்கா தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சகர்கள் கூற தொடங்கி உள்ளனர்.

'மிஷன் கம்ப்ளீட்' - ட்ரம்ப் கணக்கு!
வழக்கமான அதிரடி பாணியில், தனது வெற்றியைப் பட்டியலிடுகிறார் ட்ரம்ப்:
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் காலி!
அவர்களின் ராணுவத் தொழிற்சாலைகள் தரைமட்டம்!
கடற்படை, விமானப்படை என எஞ்சியிருந்த சொற்ப பலமும் 'பினிஷ்'!
முக்கியமாக, இனி ஈரான் அணு ஆயுதக் கனவு கூட காண முடியாது!
இப்படியெல்லாம் 'கெத்து' காட்டும் ட்ரம்ப், கூடவே ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுள்ளார். "ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனி அந்த வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் நாடுகள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு அந்த வழி தேவையில்லை!" என்பதுதான் அந்த அதிரடி.
வெற்றியா? அல்லது நழுவல்தானா?
ட்ரம்ப் இதை வெற்றியாகச் சித்தரித்தாலும், அரசியல் நோக்கர்கள் இதை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார். நீ தோல்வி அடைந்தால் கூட அதை நீயே ஒப்புக்கொள்ள கூடாது. என்ன நடந்தாலும் தோல்வியை நீ ஏற்க கூடாது என்று அவரே பல இடங்களில் கூறி இருக்கிறார்.
அப்படித்தான் ஈரானுடனான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது. உள்நாட்டில் பணவீக்கம் கழுத்தை நெரிக்கிறது.
"ஹார்முஸ் நீரிணையை மற்ற நாடுகள் பார்த்துக்கொள்ளட்டும்" என்று ட்ரம்ப் கூறுவது, உண்மையில் ஒரு 'வெள்ளைக்கொடி' பிடிக்கும் செயல்தானோ என்ற சந்தேகம் எழுகிறது. "அமெரிக்காவுக்கு அந்த வழி தேவையில்லை" என்று அவர் சொல்வது, உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பில் இருந்து அமெரிக்கா கைகழுவுவதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் தோல்வியையும் காட்டுகிறது.
"ஈஸி ஆபரேஷன்" - யாருக்கு?
"மத்த நாடுகள் ஹார்முஸ் வழியைப் பாதுகாக்கிறது ஒண்ணும் பெரிய கஷ்டமான ராணுவ நடவடிக்கை இல்லை, அது ரொம்ப ஈஸி" என்று ட்ரம்ப் சொல்வதுதான் உச்சக்கட்ட நையாண்டி. ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதாக அவர் நம்பினாலும், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் குறையவில்லை.
நேட்டோ (NATO) நாடுகளை "கோழைகள்" என்று திட்டிய கையோடு, இப்போது "நீங்களே பார்த்துக்கோங்க" என்று ஒதுங்குவது, "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பது போல, அமெரிக்கா தன்னை மட்டும் பாதுகாத்துக் கொண்டு கூட்டாளிகளை நட்டாற்றில் விடுவதாகவே தெரிகிறது.
அடுத்தது என்ன?
இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நட்பு நாடுகளைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதி அளித்தாலும், அமெரிக்க ராணுவம் பின்வாங்குவது அந்த நாடுகளிடையே ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு - "ஜெயிச்சுட்டோம்னு சொல்லிவிட்டு, சத்தமில்லாமல் நழுவுவது" போன்ற ஒரு யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. இது ஈரானுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதோடு அமெரிக்காவின் 'Exit Strategy' இஸ்ரேலுக்கு வரும் நாட்களில் பெரிய சிக்கலாக மாறும் .












Click it and Unblock the Notifications