நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை! மெத்தனமாக செயல்பட்டதா உவரி போலீஸ்?
சென்னை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உவரி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜெயக்குமார் 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிலம்பரசனுக்கு அனுப்பிய மனுவில், தனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மே 2ம் தேதி முதல் ஜெயக்குமார் திடீரென மாயமாகிவிட்டார். ஜெயக்குமாரின் வீடு அமைந்துள்ளது கரைச்சுத்து புதூர். எனவே ஜெயக்குமார் மகன் கருத்தய்யா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில்தான் இன்று உவரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜெயக்குமாரின் தோட்டத்திற்கு உள்ளே, ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் உடல் எரிக்கப்பட்டுள்ளதை பார்ப்பவர்களுக்கே பதற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் இன்று அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே உவரி போலீசாரின் செயல்பாடு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. உவரி காவல் நிலைய பகுதிக்குள் எந்த டவுன் பகுதியும் கிடையாது. அதாவது பேரூராட்சி கூட இல்லை எனலாம். அனைத்துமே, சின்ன சின்ன கிராமங்கள்தான். உவரி பஞ்சாயத்து, குட்டம் பஞ்சாயத்து மற்றும் நவலடி பகுதி வரை உவரி காவல் நிலைய எல்லையாகும். இப்படியிருக்கும்போது இதுபோன்ற ஒரு முக்கியமான புகார் கொடுக்கப்பட்டு இரு நாட்களாகியும், இந்த சின்ன பகுதியில் தேடி, ஜெயக்குமாரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. அவரது தோட்டத்திலேயே உடல் கண்டெடுக்கப்படும்வரை காவல்துறைக்கு அது பற்றி தெரியவில்லை.
பொதுவாகவே, கிராம மக்கள் போலீசில் புகார் அளிக்க போனால் தட்டிக் கழிப்பதாக புகார்கள் உண்டு. திருட்டு என புகார் கொடுத்தால் எப்ஐஆர் போடுவதில்லை, சின்ன அளவுக்குதானே களவு போயுள்ளது எதற்காக புகார் என திருப்பியனுப்புவது, பள்ளி மாணவிகளை ஆபாச கோணத்தில் செல்போனில் வீடியோ எடுத்த இளைஞருக்கு எதிராக ஊர்க்காரர்கள் புகார் அளித்தால் சரியாக விசாரிக்காமல் மாணவிகளை ஏற்றிச் சென்ற ட்ரக்கர் டிரைவர், வாகனத்திற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என சம்மந்தம் இல்லாத விஷயத்தை உள்ளே இழுத்துவிடுவது என உவரி போலீசார் மீது கடந்த சில வருடங்களாகவே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். முன்பு உவரி இன்ஸ்பெக்டராக செல்வி இருக்கும்போதும் சரி, இன்ஸ்பெக்டர் பிரேமா இருக்கும்போது சரி, இந்த விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இப்போது அரசியல் கட்சி பிரமுகர் உயிருக்கு ஆபத்து என்ற புகாரும், துரித கதியில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. விசாரணையின் தாமதத்தால் ஒரு அரசியல் பிரமுகர் உயிர் போயுள்ளது. இது மெத்தனமா, அழுத்தமா என்ற கேள்விகளை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications