தொழில் முதலீடு, புதிய கல்வி கொள்கை.. ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்துக்கு வைகோ எச்சரிக்கை!
சென்னை: முதலீடாளர்களுடன் பேசுவதால் முதலீடு வராது, புதிய கல்வி கொள்கை அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை தன்னிச்சையாக ஊட்டியில் கூட்டினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கூட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே கண்டனமும் தெரிவித்திருந்தது.

ஊட்டியில் நடைபெற்ற பல்கலைக் கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை ஆளுநர் ரவி முன்வைத்தார். ஆளுநர் ரவி பேசுகையில், போய் பேச்சுவார்த்தை நடத்துவதாலேயே முதலீடுகள் வந்துவிடாது என சாடினார். அண்மையில்தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையையும் ஆளுநர் ரவி நியாயப்படுத்தி இந்த கூட்டத்தில் பேசினார்.
ஆளுநர் ரவியின் இத்தகைய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வரம்புகளை மீறி செயல்படுகிறார்; அவர் தமது போக்கைக் கைவிட வேன்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகோ அறிக்கை: உதகையில் நடைபெற்ற பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது.
நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.
சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முதல்வர் சொல்லி இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுப் படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications