Vaiko: 2011-ல் ஓபிஎஸ் எனக்கு செய்த தவறுக்காகத்தான் தற்போது அனுபவிக்கிறார்! காட்டமாக விமர்சித்த வைகோ
சென்னை: 2011 ஆம் ஆண்டு ஓபிஎஸ் எனக்கு செய்த தவறுக்காகத்தான் தற்போது அவர் அனுபவிக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறித்து அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வைகோ பேசுகையில், கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

12 சீட்தான் என்றார்கள். இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது.. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச் செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன்.
அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓபிஎஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று 'அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார்' என்று பொய்யைச் சொல்லிவிட்டார்.
பின்னர்தான் நான் கேள்விப்பட்டேன், மதிமுகவுக்கு ஜெயலலிதா 15 சட்டசபை தொகுதியையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுப்பதாக முடிவெடுத்திருந்தார் என்று! இதனால் ஓபிஎஸ் என்னை அழைப்பார் என நினைத்து செல்போனை கையிலேயே வைத்திருந்தேன். அவர் கூப்பிடவே இல்லை. அதன் பலனை இன்று ஓபிஎஸ் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
அது போல் விஜய்யின் செயல்பாடுகளையும் வைகோ விமர்சித்திருந்தார். அதில் கரூர் தவெக பொதுக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்யின் செயல்பாடுகளை வைகோ பித்தலாட்டம் என விமர்சித்துள்ளார். "சென்னைக்கு அழைத்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்த விஜய், யாரும் செய்யாத பித்தலாட்டத்தைச் செய்துள்ளார். முதல்வர் அரசியல் பேச வேண்டாம் என கூறியும் விஜய் சகட்டுமேனிக்கு அரசியல் பேசியுள்ளார். விஜய் பொதுக் குழுவில் முதல்வரை தாக்கி பேசியது பொறுப்பற்ற பேச்சு என்றும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் எஸ்ஐஆர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிக்கல்கள் நிறைந்தது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவசரகதியில் செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையை பறித்து பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும் டிசம்பர் 9 ஆம் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications