அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது எள்ளலா?துள்ளலா? தனக்கே உரிய பாணியில் பதிலளித்த வைரமுத்து
சென்னை: அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டாரா, கேட்க வைக்கப்பட்டாரா என தெரியவில்லை என்றும் அவர் சொன்னது உண்மையின் துள்ளல் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் கலந்து கொண்டது குறைகேட்பு நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சியில் குறைகளை சொல்லத்தான் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறைகளை சொல்வது ஒன்றும் தவறில்லையே. குறைகளை சொல்வது என்பது குடிமக்களின் உரிமைதானே. கேட்டுக் கொள்வது ஆளும் தரப்பினர் கடமைதானே. உரிமை கேட்பவர்களுக்கு இருக்கிறது. கடமை ஆள்கிறவர்களுக்கு இருக்கிறது. அந்த கேள்விகளுக்கு எனக்கு ஒன்றும் தவறாக தோன்றவில்லை.
எனக்கு அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை தெரியும். என்னோடு பல ஆண்டுகளாக பயணித்து வருகிறார். அவர் இயல்பாகவே நகைச்சுவையாளர். அந்த நகைச்சுவையை தனது கேள்வியிலும் பயன்படுத்தியுள்ளார் என்றே எனக்கு தோன்றுகிறது. அது வெளியே இருந்து வந்த எள்ளல் அல்ல, உண்மையின் துள்ளல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அளவில் அவர் கேட்டதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஒரே ஒரு செய்தி, மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டாரா, இவராகச் சென்று கேட்டாரா, அது மன்னிப்புதானா என்ற விவரங்கள் முழுமையாக தெரியாமல் இது குறித்து அடிகோடிட்டு கருத்து சொல்வது ஆகாது.
ஹேமா கமிட்டி என்பது முக்கிய துறைகளில் அமைக்கப்பட வேண்டிய ஒரு அமைப்பு. திரைத்துறையில் மட்டுமில்லை, நாட்டின் எல்லா துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்றால் பெண்மையில் இருக்கும் பெண்மை என்ற கருத்தை நீங்கள் நீக்கிவிட வேண்டும்.
ஆணுக்கு ஆண்மை, பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவது நாட்டில் பேதங்களை ஏற்படுத்துகிறது. ஆணும் பெண்ணும் சமம்தான். இதில் யாரும் யாரையும் சீண்டுவது என்பது ஒரு பாலினத்தை பலவீனமாக காட்டுவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. பெண்ணினம் பலவீனமான பாலினம் அல்ல. பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கான பயிற்சியை கல்வி திட்டத்தில் இந்திய கல்வித் துறை சேர்க்க வேண்டும்.
பெண்களுக்கு விளையாட்டு பயிற்சி மட்டும் போதாது. எழுத்து பயிற்சி மட்டும் போதாது. பெண் குழந்தைகளுக்கு தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் உடல் வலிமையை ஊட்டம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும். இது ஒரு புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாக இந்த ஹேமா கமிட்டியை நான் பார்க்கிறேன். இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications