"நொறுங்கிடுச்சே இதயக்கூடு.. கண்ணீர் கன்னம் தாண்டுகிறது.. மவுனமாய்".. வைரமுத்து உருக்கம்
சென்னை: இரும்புப் பெட்டிகளைப் போலவே இதயக்கூடும் நொறுங்கிவிட்டது என்று, ஒடிசா ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களில் பலர் சீரியஸாக இருப்பதாக தெரிகிறது.
விபத்து : இந்த விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரெயில் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சடலங்கள்: இந்த விபத்தில், நிறைய பேரின் சடலங்கள் பெட்டிகளில் மாட்டிக் கொண்டிருந்துள்ளது.. இதை தங்கள் கண்முன்னாடியே பார்த்ததாக விபத்தை நேரில் சந்தித்தவர்கள் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.. வெடிவிபத்தைவிட பயங்கரமான சத்தமாக இருந்திருக்கிறது.. பெட்டிகள் எல்லாமே தூள் தூளாக நொறுங்கி உள்ளது..
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னைசென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.
என்ன காரணம்: இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த விபத்து நாட்டையே நடுநடுங்க வைத்து வருகிறது.. தலைவர்கள் நேரில் சென்று, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.. தமிழக முதல்வரும் ஒடிசா செல்வதாக தெரிகிறது..
இந்த சம்பவத்துக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.. விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை: அதில், "கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
வைரமுத்து: இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை பதிவு ஒன்றை இட்டுள்ளார், அதில்..
"இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது
- என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications