புரட்சி தமிழரா? இதை செய்யட்டும் பார்க்கலாம் .. எடப்பாடி பழனிசாமிக்கு வைத்தியலிங்கம் சவால்
சென்னை: மதுரையில் நேற்று நடந்த அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாநாட்டையும், அவருக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை பொறுத்த அளவில் தென் மாவட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஓரணியாக இருந்த போதே தென் மண்டலத்தில் மொத்தமுள்ள 10 எம்.பி தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதற்கு பின்னர் நடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மொத்தமிருந்த 58 தென் மண்டல எம்எல்ஏ சீட்களில் அதிமுக கூட்டணி 15 இடங்களை மட்டுமே வென்றது. அப்போதும் அதிமுக ஒரே அணியாக தான் இருந்தது. இந்நிலையில் தற்போது அதிமுகவிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்திருக்கிறார். டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். தென் மண்டலத்தை பொறுத்த அளவில் எடப்பாடி தரப்பை விட ஓபிஎஸ் மற்றும் டிடிவி, சசிகலா தரப்பிற்குதான் அதிக வாக்கு வங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே இதை உடைத்து தென் பகுதியிலும் தனது பலத்தை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி, இந்த மாநாட்டை திட்டமிட்டு நடத்தியிருந்தார். மாநாட்டில் மொத்தம் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், 70 ஆயிரத்திற்கும் குறைவான ஆட்களே பங்கேற்றிருந்தனர். அதுபோல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' எனும் பட்டமும் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு தங்களது ஆதரவாளர்கள் யாரும் போக வேண்டாம் என டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக சொல்லப்பட்டது.
அதேபோல நேற்றைய தினம் சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஓபிஎஸ் அணியின் தலைமை கழகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்தியலிங்கம், மதுரை மாநாட்டையும், அதில் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்ட பட்டத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, "எடப்பாடி தரப்பில் 2.40 கோடி உறுப்பினர் பதிவை சேர்த்திருப்பதாக சொன்னார்கள். இந்த மதுரை மாநாட்டுக்கு வருவார்கள் என்றும் கூறியிருந்தனர். ஆனால் மாநாட்டுக்கு 70 ஆயிரம் பேர் கூட முழுசாக வரவில்லை. ரூ.100 கோடி செலவு செய்து 70 ஆயிரம் பேரைக்கூட திரட்ட முடியாமல் 'வீர எழுச்சி மாநாடு' என பெயர் வைத்து 'வீழ்ச்சி' மாநாடாக அது நடந்து முடிந்தது.

புரட்சி தலைவர், புரட்சி தலைவி என பட்டம் கொடுத்ததற்கு ஒரு வரலாறு உண்டு. புரட்சி தமிழர் என பட்டம் கொடுத்து உள்ளனர். தமிழ் என ஒழுங்காக உச்சரித்து விட்டால் நான் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். தமிழ் மக்களுக்காக உயிர் இழந்த பிரபாகரன் புரட்சி தமிழன். கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து கொண்டிருந்த இவர் எப்படி புரட்சி தமிழர் ஆனார். காலத்தின் கோலத்தால் முதலமைச்சராகி கட்சியை அபகரிக்கத் துடிக்கும் இவருக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்.
இவருக்கு எம்.ஜி.ஆரை தெரியாது, அண்ணா பேச்சை கேட்டதில்லை. அரசியலுக்கு வந்ததே 1989ம் ஆண்டுதான். ஆனால் தற்போது மூத்த நிர்வாகிகள் எல்லாம் பணத்தாசையால் அவர் பின்னாடி நின்றுக்கொண்டிருக்கின்றனர். சரியான வேட்பாளரை திமுக போட்டால் எடப்பாடியில் கூட இவரால் வெற்றிபெற முடியாது. எதிர்வரும் தேர்தல் குறித்து அவர் பேசியிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் இல்லாமல் யாராலும் தனித்து வெற்றிபெற முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications