கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது?
சென்னை: பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட 'இஸ்லாமாபாத் பஞ்சாயத்து' இப்போது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல முடிவின்றி நிற்கிறது.
15 மணி நேர மாரத்தான் பேச்சுவார்த்தை, ட்ரம்ப்பின் அதிரடி ட்வீட்கள், ஈரானின் பிடிவாதம் என களைகட்டிய அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் அத்தியாயம், ஒரு 'சாலிட்' முடிவை எட்டாமலேயே முடிந்திருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது குழுவுடன் வாஷிங்டன் திரும்பியிருப்பது, 'அமைதி வருமா அல்லது போர் தொடருமா?' என்ற மில்லியன் டாலர் கேள்வியை அப்படியே விட்டுச் சென்றிருக்கிறது.

இஸ்லாமாபாத் பஞ்சாயத்து - முடிவற்ற மாரத்தான்:
சனிக்கிழமை நள்ளிரவு வரை நீண்ட 15 மணி நேரப் பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது மற்றும் லெபனான் போர் நிறுத்தம் ஆகிய நிபந்தனைகளில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 'பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறது' என்று ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், 'முடிவு' என்னவோ இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது.
ஜே.டி. வேன்ஸின் 'சைலண்ட்' எக்ஸிட்:
பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளைத் தொடங்குவதற்கு முன்பே, ஜே.டி. வேன்ஸ் கிளம்பியது பல யூகங்களைக் கிளப்பியுள்ளது. ட்ரம்ப் கொடுத்த 'கிளியர் கைட்லைன்ஸ்' (Clear Guidelines) படி, ஈரான் முழுமையாகப் பணியாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. "ஈரான் எங்களை ஏமாற்ற நினைத்தால், அமெரிக்கக் குழு அதற்கு ஒத்துழைக்காது" என்று வேன்ஸ் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இப்போது அவர் வெறும் கையுடன் திரும்பியிருப்பது, ட்ரம்ப் நிர்வாகம் அடுத்தகட்டமாக 'கடுமையான' நடவடிக்கைகளை எடுப்பதற்கான அறிகுறியோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் செய்த 'மேஜிக்' என்ன ஆனது?
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இந்தப் பேச்சுவார்த்தையைத் தனது ராஜதந்திர வெற்றியாகக் கருதினார். ஆனால், அமெரிக்கக் குழுவின் திடீர் வெளியேற்றம் பாகிஸ்தானுக்கும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் நிதியுதவி, ஈரானின் எல்லைப் பிரச்சனை எனப் பலமுனைகளில் சிக்கியுள்ள பாகிஸ்தான், இந்த டீலை முடித்துத் தனது இமேஜை உயர்த்த நினைத்தது. ஆனால், வல்லரசுகளின் பிடிவாதம் பாகிஸ்தானின் 'மத்தியஸ்தர்' கனவைச் சற்றே தற்காலிகமாக முடக்கி வைத்திருக்கிறது.
அடுத்தது என்ன?
துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அவசரம் அவசரமாக வாஷிங்டன் திரும்பினாலும், "நாங்க இன்னும் ஆட்டத்துல தான் இருக்கோம்" என்பது போல தொழில்நுட்பக் குழுக்கள் மட்டும் இஸ்லாமாபாத்திலேயே முகாமிட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்கான கதவுகள் முழுமையாக சாத்தப்படவில்லை என்றாலும், நிலைமை இன்னும் இழுபறியாகவே இருக்கிறது.
ஒருபுறம், "எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டோம்" என்று அடம்பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' பாலிசி; மறுபுறம், "எங்க உரிமையை விட்டுத்தர முடியாது" என்று கறார் காட்டும் ஈரானின் பிடிவாதம்! இந்த இரண்டு துருவங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஒட்டுமொத்தப் பேச்சுவார்த்தையும் ஒரு முழுமையான தீர்வை எட்டாமல், வெறும் 'ஐஸ் பிரேக்கிங்' (Ice breaking) படலமாக மட்டுமே முடிந்துவிட்டது.
இஸ்லாமாபாத் பஞ்சாயத்து
உலக நாடுகள் எதிர்பார்த்தது ஒரு 'ஒப்பந்த கையெழுத்தை', ஆனால் கிடைத்தது என்னவோ 'இடைவேளை' (Intermission) மட்டுமே! ட்ரம்ப் இப்போது ஹார்முஸ் நீரிணையில் தனது போர்க்கப்பல்களை ஏவுவாரா அல்லது ஈரானின் பிடிவாதத்தைப் புரிந்து கொண்டு கொஞ்சம் இறங்கி வருவாரா? இந்த அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு யாரது என்பதில் தான் உலகத்தின் தலையெழுத்தே அடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications