"சென்னை வந்தது வந்தே பாரத் ரயில்".. இன்று முதல் மைசூரு வரை 'சோதனை ஓட்டம்'!
சென்னை: சென்னையில் இருந்து மைசூருக்கு வருகிற 11-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், இன்று முதல் அதற்கான சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று ரயில் சென்னை வந்தடைந்தது.
நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர்.
தொலைதூர பயணங்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பான சேவை அளிப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்கள் கூட ரயிலில் செல்வதையே மிகவும் விரும்புகின்றனர்.

சென்னை- மைசூரு இடையே
இதை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயும் பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில், முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5-வது ஆக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தோரய நேர அட்டவணை
பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று மைசூருவை அடையும். இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரில் மட்டுமே நிற்கும். தற்போது இந்த ரயில் இயங்கும் தோராய நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

16 பெட்டிகளை கொண்டதாக
புதன்கிழமையை தவிர்த்து வாரத்தில் மீதமுள்ள் 6 நாட்களும் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். ஆட்டோமெட்டிக் கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான ஆடியோ விஷுவல் தகவல் மையம், ஹாட்ஸ்பாட் வைஃபை, சொகுசு இருக்கைகள் என பல்வேறு நவீன சொகுசு வசதிகளை இந்த ரயில் கொண்டதாகும். ஒவ்வொரு கோச்சிற்கும் தனித்தனியான பண்ட்ரி வசதியும் உள்ளது.

ரயிலின் சோதனை ஓட்டம்
சுடசுட உணவுகளை பரிமாறும் வகையில் இந்த பண்ட்ரிகள் ஒவ்வொரு கோச்சிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சேவையை வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையும் மறு மார்க்கமாகவும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று முதல் நடைபெற உள்ளது.

சென்னை வந்ததடைந்த ரயில்
இந்த சோதனை ஓட்டத்திற்காக நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை வந்தடைந்தது. சென்னை கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ருபனாகுடி தனது ட்விட்டர் பக்கத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டத்திற்காக சென்னை ரயில்வே கோட்டத்திற்குள் வந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அதில், சோதனை ஓட்டத்திற்காக வந்தே பாரத் ரயில் சென்னை வந்ததாக தெரிவித்து இருந்தார்.

கட்டணம் எவ்வளவு தெரியுமா
சென்னை மைசூரு இடையே பயணிக்க எகனாமி வகுப்பில் ரூ.921 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிக்க 1,880 ரூபாயும் வசூலிக்கப்படலாம் எனத்தெரிகிறது. மைசூருவில் இருந்து பெங்களூருவிற்கு கட்டணமாக எகனாமி வகுப்பிற்கு ரூ. 368-ம் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பிற்கு ரூ.768 ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications