சென்னை ஐசிஎஃப் டூ பாடி.. ஆரஞ்சு நிறத்தில் பறந்த வந்தே பாரத்! சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
சென்னை: வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில் தற்போது ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். எடை குறைவான இந்த ரயில் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில் இயக்கப்பட்டதால் அதேபோல மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தொடங்கி வைத்து வருகிறார். தென் மாநிலங்களை பொறுத்த அளவில் சென்னை-மைசூர், சென்னை-கோவை மற்றும் திருவனந்தபுரம்-காசர்கோடு வழித்தடங்களில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல புதுச்சேரி-சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் விரைவில் வந்தே பாரத் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், "நீல நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் விரைவில் அழுக்கடைந்துவிடுவதால் அதன் நிறத்தை ஆரஞ்சு மற்றும் சாம்பல் நிறத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து நேற்று சென்னையில் ஆரஞ்சு நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சோதனை ஓட்டம் விடப்பட்டு சரிபார்க்கப்பட்டது. சென்னை ஐசிஎஃப் தொடங்கி பாடி பணிமனை வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் சென்னை-நெல்லை வழித்தடத்தில் இந்த ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications