வெறும் இரு மாதங்களில்! வந்தே பாரத் ரயில்கள் மூலம் இத்தனை கோடி வருமானமா? கல்லா கட்டிய ரயில்வே
சென்னை: கோடைக்காலத்தில் அதாவது ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் சென்னையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட 5 வந்தே பாரத் ரயில்களில் எத்தனை கோடி வருவாய் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேகமாக இயங்கும் ரயிலாக வந்தே பாரத் உள்ளது. தற்போது நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவை சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர், சென்னை சென்ட்ரல் -மைசூர், சென்னை சென்ட்ரல் -விஜயவாடா, சென்னை எழும்பூர் -திருநெல்வேலி, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள், பாதுகாப்பு, குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த ரயில்கள் பயணிகளுக்கு உதவியாக இருக்கின்றன. நடப்பாண்டில் கோடை காலத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் சென்னையில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரூ 19.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் ஏப்ரல் மாதத்தில் எக்ஸிகூட்டிவ் சேர் காரில் உள்ள 100 சதவீதம் இடங்களில் 120 சவீததம் வரை டிக்கெட் பதிவாகியிருந்தது. அதாவது 100 சதவீதம் இடங்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் நிலையில் மீதமுள்ள 20 சதவீதம் டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகை தவிர மீதி தொகை திருப்பி அளிக்கப்படும்.
இந்த ரயில்களில் சேர் காரில் 122.64 சதவீதம் முன்பதிவானது. மே மாதம் எக்ஸிகூட்டிவில் 135.24 சதவீதமும் சேர்காரில் உள்ள இடங்களில் 130.04 சதவீதமும் முன்பதிவாகியிருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் இந்த ரயில் சேவை மூலமாக 1.69 கோடி ரூபாய் வருவாய் பெறப்பட்டது.
மறுமார்க்கமாக மைசூர்- சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயிலில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ரூ 1.71 கோடியும் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் மூலம் ரூ 92.75 லட்சமும், மறுமார்க்கமாக கோவை- சென்னைக்கு வந்தே பாரத் ரயிலில் 2 மாதங்களில் ரூ 79.04 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டது.
அது போல் சென்னை எழும்பூர் - நெல்லை, சென்னை - மைசூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலும் மக்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. கோடையில் நாள்தோறும் இயக்கப்பட்ட அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் கட்டணம் அதிகமான வந்தே பாரத் ரயிலில் பயணித்ததும் அதன் வருவாய் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமல்லாமல் மற்ற ரயில்களின் சேவையை அதிகரித்தால் குறைந்த டிக்கெட்டில் மக்கள் அதிக பயனடைவர் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications