“ஒருநாள் பலாத்காரம் செய்தால் எதுவும் ஆகாது என்று சொல்வாரா?”.. அண்ணாமலைக்கு வன்னி அரசு கேள்வி
சென்னை: தீபாவளியான ஒருநாள் மட்டும் பட்டாசு வெடித்தால் ஒன்னும் ஆகாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு சூழலியல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது இதன் தொடர்ச்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஒன்னும் ஆகாது
தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ள நிலையில், நேற்று (அக்.22) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "சிவகாசியில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எனவே இந்த முறை நிறைய பட்டாசு வாங்கி வெடியுங்கள். தீபாவளி ஒரு நாள்தான் எனவே அன்று பசுமை பட்டாசுகள் கூட அதிகமாக வெடியுங்கள். குழந்தைகளுக்கும் நிறைய பட்டாசு வாங்கி கொடுங்கள். பட்டாசு வெடிப்பது நமது கலாச்சாரம். காற்று மாசையெல்லாம் ஒரு நாள் பார்க்காதீர்கள். ஒருநாள் வெடிப்பதால் ஒன்னும் ஆகாது." என்று கூறியிருந்தார்.

பாதிப்பு
இதற்கு சூழலியல் ஆர்வலர்கள் பலர் கண்டம் தெரிவித்துள்ளனர். 'பூவுலகின் நண்பர்கள்' குழு ஒருங்கிணைப்பாளர் சுந்தர் ராஜன் கூறுகையில், "உலகம் முழுவதும் காற்று மாசால் 1 கோடி பேர் இறக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போடும் வட இந்தியர்களின் வாழ்வு காலம் 7.5 ஆண்டுகள் காற்று மாசால் குறைவதாகவும், தென் இந்தியர்கள் 2.5 ஆண்டுகளை இழப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காற்று மாசிற்கு பட்டாசு மட்டுமே காரணம் என சொல்லவில்லை, ஆனால் பட்டாசும் ஒரு காரணம். அறிவியல் தரவுகளையும் ஆய்வுகளையும் எப்போதாவது படித்துப்பாருங்கள், எப்போதுமே மதம், மதம் என்று யோசித்துக்கொண்டிருந்தால் "மதம்" பிடித்துவிடும். இவ்வளவிற்கும் உங்கள் கட்சியின் அரசுதான் பட்டாசு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது." என்று கூறியுள்ளார்.

கேள்வி
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு ட்விட்டரில், "ஒரு நாள் பட்டாசு வெடித்தால் ஒன்றும் ஆகாது"
என சொல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு நாள் சிகரெட் குடித்தால் ஒன்றும் ஆகாது. ஒரு நாள் தண்ணி அடிச்சா எதுவும் ஆகாது. ஒரு நாள் மட்டும் பலாத்காரம் செய்தால் எதுவும் ஆகாது. ஒரே ஒரு நாள் கஞ்சா குடித்தால் எதுவும் ஆகாது என இனி சொல்வாரோ?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த ட்வீட் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

கட்டுப்பாடு
நாள் முழுவதும் வெளியேற்றப்படும் வாகன புகை, தொழிற்சாலை புகை என இருக்கும் போது ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு காரணமாகதான் மாசு ஏற்படுகிறதா? என்று பலர் கேள்வியெழுப்பியுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்தாண்டுடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications