தலித் சிறுவன் மீது சிறுநீர் ஊற்றி.. தாயை தாக்கி.. மணப்பாறை போலீசின் சாதி சார்பு - வன்னியரசு கண்டனம்
சென்னை: மணப்பாறையில் தலித் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய அடக்குமுறைக்கு எதிராக புகாரளித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்யாத போலீசார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "தொடரும் சாதி வெறி: கைது செய்வதற்கும் போராட்டம் நடத்த வேண்டுமா? திருச்சி மாவட்ட காவல்துறை குற்றவாளிகளை பாதுகாக்கிறதா? திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தில் உள்ள விடத்திலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோ தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ஆதிக்க சமூகத்தை சேர்ந்த வடிவேல் வசித்து வருகிறார். வடிவேல் வளர்த்து வரும் 8 க்கும் மேற்பட்ட நாய்கள், அவ்வப்போது இளங்கோவின் குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் கடித்து அச்சுறுத்தி வந்துள்ளன.

கடந்த செப். 30 ஆம் தேதி இளங்கோ மனைவி ராசாத்தியை, வடிவேல் மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் இணைந்து சாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கி உள்ளனர். அதே நாள் மாலையில், விடத்தலாம்பட்டி அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் இளங்கோவின் மகன் (6 வயது) வீடு திரும்பும் போது, வடிவேலுவின் மற்றொரு மகன் (12 வயது) ஒரு பாட்டிலில் சிறுநீரை கொண்டு வந்து விக்னேஷ் மீது ஊற்றியுள்ளான்.
இதனை தொடர்ந்து, அக். 4 ஆம் தேதி விறகு பொறுக்க சென்ற ராசாத்தியை வடிவேலுவின் மனைவி அழகுமணி பைப்பை கொண்டு தாக்குதல் நடத்தியதில் தொடையில் பலத்த காயமடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் ராசாத்தி. காவல்துறையினரும் யாரும் மருத்துவமனைக்கு வந்து விசாரிக்கவில்லை. இந்த தொடர் வன்கொடுமைகளை சந்தித்த இளங்கோ மணப்பாறை காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
புகாரை திரும்பப்பெறும்படி மணப்பாறை காவல்நிலைய போலீசார் இளங்கோவுக்கு மிரட்டல் விடுத்த நிலையில், அக். 11 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சென்று மாவட்ட எஸ்.பி. வருண் குமாரை சந்தித்து புகாரளித்தனர். அதே நாளில், இளங்கோவின் வீடு மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளார் இளங்கோ. இந்த விவகாரம் அக். 14 ஆம் தேதி ஊடகங்களில் வெளியான நிலையில் நேற்று அவசர அவசரமாக எப்.ஐ.ஆர் போடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
தலித் சிறுவன் மீது சிறுநீர் ஊற்றப்பட்டது, அவனது தாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து புகாரளித்தும் 12 நாட்களாக எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படாதது ஏன்? வன்கொடுமை புகாரை நேரடியாக விசாரிக்க வேண்டிய டி.எஸ்.பி. என்ன செய்துக் கொண்டிருந்தார்? ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக தலித்துகளை மிரட்டியவர்கள் மீதும், தாமதமாக வழக்கை பதிந்த மணப்பாறை காவல்நிலைய போலீசார் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா?
காவல்துறையில் நிறைந்துள்ள சாதி - மத சார்பு அதிகாரிகளின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்தமாக திமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கின் பின்னுள்ள சதியை விரிவாக விசாரிக்க வேண்டும். காவல்துறையை தூய்மைப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வன்கொடுமை குறித்தும் காவல்துறையின் மெத்தன போக்கு குறித்தும் வெளியுலகத்துக்கு கொண்டு வந்த இளம் பத்திரிகையாளர் இனியநந்தன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் பாராட்டுகள்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications