“காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும்”! விசிக உயர்நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள், காவல்துறைக்கு எதிராக கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் காவல் வன்முறைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அந்த தீர்மானத்தில், "சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் அஜித் குமார், காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில், காவல் வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (BNS) பிரிவு 120(1) மற்றும் 120(2) இன் கீழ் காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்வது குற்றமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 379 இன் கீழும் காவல்நிலையங்களில் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சட்டப் பாதுகாப்புகள் இருந்தும், காவல் வன்முறைகள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன. இது காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்து மதிப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.
எனவே, காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்துப் பயிற்சி அளிப்பதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், காவலர்களால் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட அஜித் குமார் குடும்பத்திற்கு ₹1 கோடி இழப்பீடு வழங்கி, அந்த தொகையை குற்றமிழைத்த காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சி என்கிற ரீதியில் இந்த பிரச்சனையை கையில் எடுத்திருந்தாலும், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் விசிக இது குறித்து குரல் எழுப்பி வருவது கவனம் பெற்றிருக்கிறது. அதேபோல சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் இந்த விஷயத்தில் காவல்துறைக்கு எதிராக நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துடன், மத அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து, நல்லிணக்கத்தை காக்க வேண்டும், உயர்கல்வி மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள உதவித் தொகைகளை விடுவிக்க வேண்டும், அரசமைப்புச் சட்டத்திலிருந்து செக்யூலரிசம் என்ற சொல்லை அகற்றும் முயற்சியைத் தடுப்போம், மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம் பெருந்திரள் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவோம் என மொத்தம் 5 தீர்மானங்கள் போடப்பட்டிருக்கின்றன.
இந்த தீர்மானங்களில் மத அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து, நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என போடப்பட்டிருக்கும் தீர்மானமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றி நடக்கும் வலதுசாரி, இந்துத்துவா அரசியலுக்கு எதிரானதாக இந்த தீர்மானம் பார்க்கப்படுகிறது.
அதாவது, "தமிழ்நாட்டில் மதத்தின் அடிப்படையில் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. முருகன் பெயரால் அந்த சதித்திட்டத்தை நிறைவேற்ற முயலுகின்றன. இதை எதிர்கொள்வதற்கான சரியான அணுகுமுறை, அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிப்பதே ஆகும்.
பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதவாத சதித்திட்டத்தை முறியடித்து, தமிழ்நாட்டில் நல்லிணக்கச் சூழலைக் காக்க, மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என இந்த உயர்நிலைக் குழுக் கூட்டம் அறைகூவல் விடுக்கிறது" என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications