தமிழ் தேசியம் என்பது இனவாதம் அல்ல.. சீமான் அணுகுமுறையில் மாற்றம் தேவை.. திருமாவளவன் பேட்டி!
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், பெரியார் பேச்சிற்கான ஆதாரத்தை கேட்டு பல்வேறு இயக்கங்களும் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் சீமானின் கருத்து தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், சீமான் உண்மையான தமிழ் தேசியத்தை உயர்த்திபிடித்தால், இதுபோன்ற முரண்பாடுகளில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை. திராவிட அரசியல் எதிர்ப்பு தான் தமிழ் தேசியம் என்று முடிவு செய்தது, அதன் அடிப்படையில் செயல் திட்டங்களை வரையறுத்து பணியாற்றுவது அவருடைய நிலைப்பாடுகளுக்கு எதிராக நிற்கிறது.

பெரியார் இயக்கங்களும், அம்பேத்கர் இயக்கங்களும் தான் அவருக்கு அடித்தளம் கொடுத்தன. கை தூக்கிவிட்டதும் இரு இயக்கங்களும் தான். அரசியலில் அவருக்கு அடையாளத்தை கொடுத்ததும் இந்த இரு இயக்கங்கள் தான். சமூகநீதி அரசியல் என்பது சீமான் தொடக்க காலத்தில் பேசினார். ஆனால் இன்று முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்.
இந்த நிலைக்கு தமிழ் தேசியம் என்பது வெறும் இனவாதமாக மாறியதன் விளைவு தான். தமிழ் தேசியம் என்பது வெறும் இனவாதமாக இருக்க முடியாது. சீமான் பினற்றக் கூடிய போராளிகள் இனவாதத்தை உயர்த்தி பிடிக்கவில்லை. அவருடைய பெயரையும், தன்னுடைய நிலைப்பாடுகளுக்கு கையாள்வதும் ஏற்புடையதல்ல.
பிற மொழி வெறுப்பு, பிற இன வெறுப்பு, குறிப்பாக பெரியார் மீதான வெறுப்பு என்பது சீமான் பின்பற்றி வரும் போராளிகளின் அரசியல் அல்ல. திராவிட அரசியலை அவர் ஒருபோதும் விமர்சித்ததில்லை. அதனால் மாவீரர்களின் பெயரையும் சீமான் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. பெரியார் உறவு முறை குறித்து எழுதியது உண்மை. அதனை அறிவியல் கண்கொண்டு பார்த்தால், அதிலுள்ள உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
வெறும் வெறுப்பு அணுகுமுறையால் அதனை கவனித்தால், புரிந்து கொள்ள முடியாது. உலகம் முழுவதும் உறவு முறை எவ்வாறு இருக்கிறது, கடந்த காலங்களில் எவ்வாறு இருந்திருக்கிறது, இப்போதும் எவ்வாறு மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது என்பதை பெரியார் சுட்டிக் காட்டுவதற்கு காரணம் இருக்கிறது.
இந்து மதம் உறவுமுறையில் சில புனிதத்தை கற்பிக்கிறது. அதுவொரு கற்பிதம் தான் என்று அம்பலப்படுத்துவதற்காக பெரியார் அப்படி சொல்கிறார். ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை. இந்துமதம் பின்பற்றக் கூடிய உறவுமுறைகளில் புனிதம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பது விமர்சனத்திற்குரியது என்பதே பெரியாரின் பார்வை.
அவர் ஒருபோதும் நடைமுறையில் உள்ள ஒழுக்கங்களுக்கு எதிராக எல்லோரும் வரம்பு மீறி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டவில்லை. அதனால் பெரியார் மீது ஆதாரமின்றி அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது. சீமான் இப்படியான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்பது இந்திய தேசிய எதிர்ப்பில், மதவெளி தேசிய எதிர்ப்பில் தான் உள்ளது. தெலுங்கு எதிர்ப்பில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திமுக எதிர்ப்பு என்பது அவருடைய தனிப்பட்ட அரசியல்.
திராவிட கட்சிகளை விமர்சிக்கும் பெயரில் திராவிட கருத்தியலை எதிர்ப்பது மற்றும் பெரியாரை விமர்சிப்பது மிகமிக கண்டிக்கத்தக்கது. சீமான் மீது எனக்கு மதிப்பு உண்டு. அதனால் சீமான் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெரியார் மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதில் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அது சனாதன சக்திகளுக்கு துணை போவதற்கே பயன்படும். அவரின் கருத்தை ஆதரித்திருப்பது அண்ணாமலை ஒருவர் தான். இதில் இருந்தே சீமான் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications