ஆளுங்கட்சி கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்... திருமாவளவன் விமர்சனம்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பதோடு மாபெரும் வெற்றியையும் தேடித்தந்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிகார வலிமை
அதிமுக-பாஜக கூட்டணியின் அதிகார வலிமை உள்ளிட்ட அனைத்து பலத்தையும் மீறி திமுக கூட்டணிக்கு தமிழ்ச்சமூகம் பெரும்பான்மை ஆதரவை தந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு எதிராக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிலவிய எதிர்ப்பு நிலை இப்போதும் நீடிப்பதை தேர்தல் முடிவு உணர்த்துவதாக கூறியுள்ளார்.

நீதிமன்றம்
தமிழகத்தின் பல இடங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டார்கள் என்றும், நீதிமன்றங்களை நாடி நீதியை பெற்றுக்கொள்ளுங்கள் என பல இடங்களில் அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறிய அவலம் நடந்தது எனவும் திருமா ஆவேசம் காட்டியுள்ளார்.

மகிழ்ச்சி
ஆளுங்கட்சிக்கு துணையாக அதிகாரிகள் செய்த அடாவடிகளையும் தாண்டி திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பது பெரு மகிழ்வை தனக்கு தருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நிலைப்பாடு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவை பாடமாக எடுத்து குடியுரிமை சட்ட விவகாரத்தில் அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், சட்டமன்றத்தில் அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் திருமா கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications