அரசியலமைப்பு சட்டத்தையே ஆளுநர் ரவி மீறிவிட்டார்.. வார்த்தையை தவிர்த்துவிட்டார்.. ரவிக்குமார் ஆவேசம்
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையில் ஆளுநர் சில குறிப்பிட்ட வார்த்தைகளைத் தவிர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து உள்ளதாக விசிக ரவிக்குமார் சாடியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் இது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
அதன்படி இன்று காலை தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் தனது உரையைத் தொடங்கினார். என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை ஆளுநர் ரவி தொடங்கினார்.

ஆளுநர் உரை
ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அவர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளையும் ஓரிரு வரிகளையும் தவிர்த்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாகத் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார். அதேபோல தமிழ்நாடு அரசு என்ற வார்த்தை தவிர்த்து இந்த அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அதேபோல பெரியார், அண்ணா, கருணாநிதி என்ற பத்தியை அவர் படிக்கவில்லை..

விசிக ரவிக்குமார்
அதேபோல மகளிர் மேம்பாடு, அம்பேத்கர், திராவிட மாடல் என்ற வார்த்தைகள் அடங்கிய பத்தியையும் அவர் படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக எம்பி ரவிகுமார் கூறுகையில், "இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநர் மரபை மட்டும் மீறவில்லை. அவர் அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதித்து உள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்துள்ளார்
ஆளுநர் இனி பதவியில் நீட்டிக்கக் கூடாது. அவரை உடனடியாக பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும். இனி ஒரு நாள் கூட அவர் ஆளுநர் பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்குக் கடுமையாக தமிழ்நாடு அரசு எதிர்வினையாற்ற வேண்டும். அவர் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு மக்களையும் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இப்போது அரசியலமைப்பு சட்டத்தையே அவமதித்துள்ளார். இனியும் அவர் இந்த பதவியில் இருக்கக் கூடாது.

ஆளுநருக்குத் தனி அதிகாரம் இல்லை
அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத் தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். இதுதான் மரபு. அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு எனத் தனியாக எந்த அதிகாரமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையைத் தான் அவர் வாசிக்க வேண்டும். இதுதான் அவரது கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அவர் தமிழக அரசையும் தமிழக மக்களையும் அவமதித்து உள்ளார்.

நீக்க வேண்டும்
அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மீறி, ஒருவர் அதே அரசியலமைப்பு சட்டம் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டு செயல்பட முடியாது. எனவே, அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று சாடியுள்ளார். முன்னதாக ஆளுநர் தாமாக முன்வந்து பேசிய வார்த்தைகளை அக்குறிப்பில் பதிவேற்றக்கூடாது என்றும் அவைக்குறிப்பில் அரசு தயாரித்துக் கொடுத்த உரை மட்டுமே இடம் பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications