ஆட்சி அதிகாரத்தில் பங்கு! பேக் அடித்த காங்கிரஸ்.. விசிக நிலைப்பாடு என்ன? திருமாவளவன் விளக்கம்
சென்னை: பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசி வந்த காங்கிரஸ், தற்போது சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறது. அதேபோல ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்கமளித்திருக்கிறது.
திமுக கூட்டணியிலும் சரி, அதிமுக கூட்டணியிலும் சரி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது இதற்கு முன்னர் இல்லாத நடைமுறையாகும். இருப்பினும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று கூறியிருந்தார். எனவே திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேச தொடங்கின.

வாயை விட்ட காங்கிரஸ் புள்ளிகள்
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற விஷயம் குறித்து பேசியிருந்தனர். "காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் மட்டுமே முதல்வர் பதவி சாத்தியமாகும். இல்லையென்றால், முன்னாள் முதல்வராகவே திருப்தி அடைய நேரிடும். காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பிரச்சாரம் செய்வார்கள். கட்சிக்கு மரியாதை கிடைத்தால் மட்டுமே வெற்றிக்கு அனைவரும் உழைப்போம்" என்று மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.
பீகார் தோல்வியும் சைலன்ட் மோடும்
ஆனால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியை சந்தித்தது. கூட்டணியை ஒருங்கிணைக்க தவறியது, தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக சரியான நேரத்தில் அங்கீகரிக்க மறுத்தது, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட்டது என பல தவறுகளை காங்கிரஸ் செய்தது. இப்படி இருக்கையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இந்த தோல்வி காரணமாக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற டோனை குறைத்திருக்கின்றனர்.
விசிக நிலைப்பாடு என்ன?
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி விளக்கமளித்திருக்கிறது. "விசிக தேர்தல் அரசியலில் வந்ததில் இருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்கள் முன்வைத்து வருகிற கருத்து. கடந்த 2016ஆம் ஆண்டு ஒவ்வொரு கட்சித் தலைவரை அழைத்து ஒரு கருத்தரங்கத்தை நடத்தி அந்த கருத்தை விசிக முன்னிறுத்தியது. அதற்கான காலம் கனியும் நேரத்தில் அந்த கருத்தை சரியான முறையில் விசிக முன் வைக்கும். 2026ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும். இரட்டை இலக்க இடங்களை திமுகவிடம் விசிக கேட்கும்" என்று விசிக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் விளக்கமளித்திருந்தார்.
திருமாவளவன் விளக்கம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், "நாங்கள் இந்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை வைக்கவில்லை என்ற பொருளில் அவர் பேசியிருக்கிறார். 2026 தேர்தலில் அது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. அதை இப்போது நாங்கள் வலியுறுத்த மாட்டோம். அந்த கருத்தை நாங்கள் கைவிடவில்லை. பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை இந்த தேர்தலில் நாங்கள் ஒரு நிபந்தனையாக வைக்க மாட்டோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications