வெளிச்சத்திற்கு வந்த ரூ 1000 கோடி ஊழல்!.. எனது உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து.. வீரலட்சுமி பரபரப்பு
சென்னை: என்னுடைய உயிருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் ஆபத்து உள்ளதாக தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சில மாதங்களாக சீமான் - விஜயலட்சுமி விவகாரத்தில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வந்தார். சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்று பெங்களூர் திரும்பி விட்டதால் தற்போது சீமான் விவகாரம் ஓய்ந்துள்ளது.

இந்த நிலையில் தனது கவனத்தை பாஜக மீது வீரலட்சுமி திருப்பியுள்ளார். ரூ 1000 கோடிக்கு ஊழல் நடத்த திட்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயசந்திரன் மற்றும் எம்ஜி பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர்.
இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு வகிப்பது மாநில பாஜக தலைவர் அண்ணாமலைதான். இது தொடர்பாக அவர்களுடைய சொத்து பத்திர விவரங்களை சேகரித்து லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருமான வரித் துறையிடம் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டது. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வரும் 26ஆம் தேதி 3ஆவது முறையாக புகார் அளித்துள்ளோம்.
இதில் அண்ணாமலையின் பெயரை நாங்கள் ஏன் சேர்க்கிறோம் என்றால் சென்னை- பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் இணைந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதை முறியடிக்கத்தான் நாங்கள் ஆவணங்களை திரட்டி 26 ஆம் தேதி புகார் கொடுக்கிறோம்.
மாலினி ஜெயசந்திரன் , எம்.ஜி பாஸ்கர், அண்ணாமலை ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம் என்பதை நாட்டு மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
அத்துடன் விஜயலட்சுமி சீமான் மீது கூறிய பாலியல் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமிக்கு வீரலட்சுமி துணை நின்றார். பின்னர் பிரச்சினை தாங்க முடியாமல் விஜயலட்சுமி வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டு மீண்டும் பெங்களூர் சென்றுவிட்டார். சீமானை வீடியோவில் வீரலட்சுமி கடுமையாக விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியினர் தன்னை மிரட்டுவதாகவும் போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணாமலை மீது மற்றொரு புகாரை வீரலட்சுமி அளித்துள்ளார். அதாவது அண்ணாமலை மீது நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக புகார் கூறியதால் தன்னை பற்றி விசாரித்த சிலர் தனது வீட்டில் மதுபாட்டில்களை வீசியுள்ளனர். எனவே தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ, தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அண்ணாமலைதான் முழு பொறுப்பு என புகாரில் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications