சென்னை அருகே சாம்சங் ஊழியர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது..! சிசிடிவி காட்சி
சென்னை: சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு லிப்ட் கொடுத்து ஏற்றி சென்ற மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் சிக்கிய ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க சென்றவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலையில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் வந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் இன்று காலை தொழிற்சாலை அமைந்துள்ள சுங்குவார்சத்திரம் பகுதி அருகே நடந்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக மினி சரக்கு வாகனத்தின் டிரைவர், அந்த வழியாகத்தான் செல்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுள்ளார். நடந்து வந்ததால், செல்லும் வழிதானே என்று நினைத்து ஊழியர்கள் 13 பேர் அந்த வாகனத்தில் ஏறியுள்ளனர்.
மினி சரக்கு வாகனத்தின் பின்பக்கம் தொழிலாளர்கள் ஏறியுள்ளனர். வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி இடதுபுறமாக வந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் காயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீபெரும்பதூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் வாகனம் விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து சுங்குவர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு வாகனத்தின் டிரைவர் வலுக்கட்டாயமாக சாம்சங்க் ஊழியர்களை வாகனத்தில் வருமாறு கூறி அழைத்து சென்றதாகவும், வாகனத்தை தாறுமாறாக இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்துவதாக தெரிகிறது.

போராட்டத்தில் தொழிலாளர்கள்: காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவனம் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 1,200 பேர் கடந்த 30 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கோரிக்கை என்னவென்றால், சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.
கடந்த மாதம் 9-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வர நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் முன்னிலையில், சாம்சங் அதிகாரிகள், ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சங்கம் அமைக்கும் கோரிக்கையை தவிர்த்து பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஆலை நிர்வாகம் வாக்குறுதி அளித்தது.

அதன் அடிப்படையில், உடன்பாடு ஏற்பட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டம் தொடரும் என்று சிஐடியு அறிவித்தது. இதன்படி, இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications