'இப்படி செஞ்சத்துக்கு சாரிங்க.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட வேளச்சேரி எம்.எல்.ஏ.. என்ன காரணம் தெரியுமா
சென்னை: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ள நிலையில், அப்பகுதியின் சட்டசபை உறுப்பினர் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் தனது வீடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலேயே மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா ட்வீட் செய்துள்ளார்
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் மழை முதலே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

கொட்டிய கனமழை
குறிப்பாக நேற்று அதிகாலை மிகக் குறுகிய நேரத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியதால் பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தேங்கி இருக்கும் மழை நீரை மோட்டரை கொண்டு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வேளச்சேரி மேம்பாலம்
எப்போது கனமழை பெய்தாலும் மோசமாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று வேளச்சேரி. கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் சமயத்தில் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இருசக்கர வாகனங்கள் தொடங்கி கார்கள் வரை அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வேளச்சேரியில் இந்த முறையும் நிலைமை மாறவில்லை. வேளச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த முறை உஷாரான கார் உரிமையாளர்கள் வேளச்சேரி மேம்பாலத்தின் மீது கார்களை பத்திரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ
வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ள நிலையில், அப்பகுதியின் சட்டசபை உறுப்பினர் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் தனது வீடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாலேயே மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டதாக வேளச்சிரே எம்எல்ஏ அசன் மவுலானா ட்வீட் செய்துள்ளார். மேலும், வெள்ளநீர் புகுந்த தனது வீட்டின் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மன்னிப்பு
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "வேளச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், முதலில் எனது வீட்டின் நிலைமையைச் சரி செய்ய வேண்டும், மீட்பு நடவடிக்கைகளுக்காக வேளச்சேரிக்கு வருவதற்கு முன்பு எனது குடும்பத்தை வேறு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றினேன்" என பதிவிட்டுள்ளார். வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகள் மோசமாக உள்ள நிலையில், சட்டசபை உறுப்பினர் வீட்டிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி எண்கள்
முன்னதாக நேற்றைய தினம் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தார். அடுத்து வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதால் தீபாவளிக்கு ஊருக்குச் சென்றவர்கள் சில நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications