வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் .. தாம்பரம், கிண்டி மக்களுக்கு இனிப்பான செய்தி
சென்னை: தென் சென்னை மக்களுக்கும் முக்கியமான கனவாக இருக்கும் ஒரு போக்குவரத்து என்றால் அது வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை போக்குவரத்து தான். ஏனெனில் தாம்பரம், செங்கல்பட்டு, கிண்டி என எந்த வழித்தடமக்களும், ஐடி நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்றால் வேளச்சேரி வர வேண்டும். அவர்களுக்கு பரங்கிமலை ரயில் வழித்தடம் முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் அங்கு பணிகள் முடிந்துவிட்டன. எப்போது ரயில் சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று 1985ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கடற்கரை பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை கொண்டுவர திட்டமிடப்பட்டது.இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு கிடைக்க முழுமையாக 40 வருடங்கள் ஆகியிருக்கிறது. இரண்டு தலைமுறைகளை கடந்து மூன்றாவது தலைமுறைக்குத்தான் திட்டம் வந்திருக்கிறது.

முதலில் சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 266 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997ஆம் ஆண்டு முடிந்தது. 2ஆம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியே 59 லட்சம் ரூபாயில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முதல் பாதி 12 வருடத்திலும், 2ம் பாதி 10 வருடத்தில் முடிந்தாலும், 3வது பாதியான இறுதிப்பணிகள் முடிய 16 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. , வேளச்சேரி - பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணி 495 கோடி ரூபாயில் 5 கிமீ தூரத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் வெறும் 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிவு பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த பிரச்சினைக்கு கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டு, கடந்த 2024-ம் ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இங்கு பாலத்தை மீண்டும் அமைக்கும் பணி முடிவடைந்தது. அண்மையில் பறக்கும்ரயில் பாதையில் சரக்கு ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது. இதையடுத்து எப்போது இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து. இதுகுறித்து ரயில்வே அதிகாரிள் கூறும் போது, 'வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது.
இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்டவாளங்கள் உறுதி தன்மை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்வார். ரயில் இயக்க பாதுகாப்பு கமிஷனர் அனுமதி வழங்கிய பின்பு இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும். விரைவில் பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் சோதனை மேற்கொள்ள உள்ளார். அடுத்த மாதம் இந்த வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications