வேலூரில் தங்கும் விடுதி.. லோக்சபாவில் கதிர் ஆனந்த் வைத்த கோரிக்கை..நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வேலூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக யாத்ரி நிவாஸ் கட்டித்தரவேண்டும் என்று லோக்சபாவில் கோரிக்கை வைத்தார் திமுக எம்.பி கதிர் ஆனந்த். மத்திய அரசு அறிவிக்கும் முன்பாகவே தமிழக அரசு சார்பில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மகனும் எம்.பியுமான கதிர் ஆனந்த் தனது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை அவ்வப்போது லோக்சபாவில் பேசி வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு நடாளுமன்றத்தில் வேலூர் நகரத்தில் வெளியூர் பயணிகள் தங்க 'யாத்ரி நிவாஸ்' விடுதி கட்டவும், காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் பூஜ்ஜிய நேரத்தில் குறிப்பிட்டு பேசினார்.

அவர் தனது உரையில், எனது மக்களவைத் தொகுதியிலுள்ள வேலூர் மாநகராட்சியின் நகரம் மிகமுக்கியமானது. இங்குள்ள உலகப் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனைக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்கள் நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்கும் தேவை ஏற்படுகிறது. ஆனால் நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு ஓட்டல்களில் அறைகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதில், கட்டணம் அதிகமாக இருப்பதாலும் அங்கே அறை எடுத்து தங்க முடியாதமையால், ஏழை எளியவர்கள் வேறு வழியின்றி நடைமேடைகளிலும், திறந்த வெளியிலும் தங்குவது வேதனையளிக்கிறது.
எனவே அவர்களின் நலனுக்காக 1000 பேர் தங்கும் வசதியுடன் 'யாத்ரி நிவாஸ்' எனும் பயணியர் தங்கும் விடுதி கட்டுவது மிகவும் அவசியம். காட்பாடியில் கேந்திரிய வித்யாலயா தொடங்க அனுமதி கிடைத்த பிறகும் பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி மெத்தனமாக உள்ளது. எனவே, அதனை விரைவுப் படுத்தி, வரும் 2022-23 ஆம் கல்வியாண்டிலிருந்து வகுப்புகள் தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவை இரண்டிற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
மத்திய அரசிடம் கதிர் ஆனந்த் எம்.பி வைத்த கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வியாழக்கிழமையன்று சென்னை கிண்டியில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். இதை சொன்னால் நமது நீர்வளத் துறை அமைச்சருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர் பலமுறை இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் இது குறித்து தொடர் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் சிஎம்சி போன்ற பல்வேறு பெரிய மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இவர்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத பலரும் சிகிச்சைக்காக வருவதாலும் அவர்களுடன் வருபவர்கள் வேலூரில் தங்குவதற்கு, குறைந்த கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டுவரப்பட்டது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தினை கடைபிடிக்கும் நமது அரசு, இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்தில் 2 எக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திராவிட மாடல் அரசின் அங்கங்களாக உள்ள எங்கள் அனைவரையும் இன்றும் இயக்கிக் கொண்டிருக்கும் இயங்கு சக்தியாக தலைவர் கருணாநிதிதான் இருக்கிறார். அவர் பெயரை உச்சரிக்கும் போதே ஓராயிரம் மடங்கு பலம் பெறுகிறோம். அந்த பலத்தில் எங்களது பயணத்தைத் தொடர்வோம்" என்று முதல்வர் பேசினார். டெல்லியில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என்று திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications