"உதயசூரியன்" அனலடிக்குதே.. விடாமல் திமுக மீது பாயும் வேல்முருகன்.. நொறுங்கும் கணக்கு.. புது அணியா?
சென்னை: திமுக அரசு மீது, தமிழக வாழ்வுரிமை கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் அதிகரித்தபடியே உள்ளன.. என்ன காரணம்?
சமீபகாலமாகவே, வேல்முருகனின் அரசியல் நிலைப்பாட்டில் மாறுதல் தென்பட்டு வருவதாக விமர்சகர்கள் கருத்துசொல்லி வருகிறார்கள்..
குறிப்பாக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும்கூட, திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தயங்குவதில்லை.. அது அவரது பேட்டிகளிலும் தொடர்ந்து கவனிக்க முடிகிறது..

பேட்டிகள்: ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில், "சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார்" என்று கூட்டணி கட்சியில் உள்ள வேல்முருகனே அன்று தெரிவித்திருந்தார்.. அதுமட்டுமல்ல, முதல்வர் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்றும் வேல்முருகன் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
கடந்த ஜூலை மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் வேல்முருகன் பேசும்போது, "சமூக ஊடகங்களில் என்னை திமுகவுக்கு சிங் சாங் அடிப்பவன் என்று கேலி செய்கிறார்கள். நான் ஒருபோதும் திமுகவுக்கு சிங் சாங் அடிக்க மாட்டேன். துணிந்து கேள்விகள் கேட்பேன், கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க மாட்டேன். ஏனென்றால் ஒரு கூட்டணி கட்சியின் தலைவர் என்கிற முறையில் கூட திமுக எனக்கு எந்த மரியாதையும் தருவதில்லை" என்று சீறியிருந்தார்.
அதிருப்திகள்: இதற்கு நடுவில், சட்டப்பேரவையில் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.. "சபாநாயகர் என்னை துணைக் கேள்விகளை கேட்கவே அனுமதிப்பதில்லை. இது நியாயமா?" என்று வெளிப்படையாகவே கேட்டிருந்தார்.. அத்துடன், நான் திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவன் என்பதற்காக சபாநாயகர் என்னை இப்படி குத்திக் காட்டக் கூடாது. அவமதிக்கக் கூடாது என்ற ஆதங்கத்தையும் கொட்டியிருந்தார்..
கள்ளச்சாராய விவகாரமாக இருந்தாலும் சரி, என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரமாக இருந்தாலும் சரி, வேல்முருகன் முன்னெடுத்த போராட்டங்கள் திமுக தலைமைக்கு அதிருப்தியையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிலும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று வேல்முருகன் அறிவித்திருந்தது, அறிவாலயத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாம்.
இஸ்லாமியர்கள்: "தேர்தலுக்கு முன்பாக ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க வேண்டுமென போராட்டம் நடத்தியபோது அதில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து பேசாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்?" என்ற வேல்முருகனின் கேள்வியையும் திமுக கவனிக்காமல் இல்லை..
"எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது எங்கள் கூட்டமைப்பு முன்னெடுத்த போராட்டங்களால் தான் அந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அந்த நிலைக்கு எங்களை நீங்களும் தள்ளிவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டுள்ளேன். ஒருவேளை எங்களது கோரிக்கையை நிறைவேற்ற தவறினால் ஜுன் மாத இறுதியில் அரசுக்கு எதிராக கோட்டை நோக்கி பேரணியாக செல்வோம்" என்றும் வேல்முருகனின் அறிவிப்பும், திமுக களத்தை அதிர வைத்தது.
"மதுபான விற்பனை மூலம் வரும் தொகையால் தான் அரசாங்கமே செயல்படுகின்றது எனச் சொல்வதற்கு உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும்" என்று இன்றும்கூட, வேல்முருகன் தன்னுடைய குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால், நாளுக்கு நாள் திமுக மீதான அதிருப்திகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

விசிக: இதைத்தான் விசிக தலைவர் திருமாவளவனும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. "திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை.. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம்" என்று செய்தியாளர்களிடமே அன்று சொன்னார் திருமாவளவன்..
அந்தவகையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிளை போலவே, திமுக அரசின் தவறுகளை வாழ்வுரிமை கட்சியும் சுட்டிக்காட்ட தயங்குவதில்லை.. அதேசமயம், கூட்டணி நிலைப்பாடு இனி எப்படி இருக்க போகிறது? யாருடன் அணி சேர போகிறது? அல்லது திமுகவுடனேயே தொடர்ந்து இணைந்து பயணிக்க போகிறதா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது..
கூட்டணி தர்மம் என்பது வேறு, கூட்டணிக்கு ஆதரவு என்பது வேறு என்ற நிலைப்பாட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியும் முன்னெடுக்குமா? என்பதும் தெரியவில்லை.. ஆனால், வடமாவட்டங்களில், தனக்கான செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்து வரும் வேல்முருகனின் அரசியல், பலரையும் கவனிக்க வைத்து வருகிறது.. அந்தவகையில், போகிற போக்கை பார்த்தால், அரசியல் கணக்கு நிச்சயம் மாறும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்..












Click it and Unblock the Notifications