நயன்தாரா திருமண ஆவணப்படம்.. நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் பரபர வாதம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ரூ.10 கோடி இழப்பீடு கேட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படத்தில், நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி, வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஏற்கெனவே தனுஷிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், ஆனால் வேண்டுமென்றே எந்த பதிலும் கொடுக்காமல், இப்போது ஆவணப்படம் வெளியானபோது நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறி நயன்தாரா அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்திருந்தார். வெறும் 3 விநாடி காட்சிகளுக்காக ரூ.10 கோடி கேட்டதாக கொந்தளித்திருந்தார் நயன்தாரா.
அதைத்தொடர்ந்தே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம். இதையடுத்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண டாகுமெண்டரி படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம், தனுஷ் தரப்பு வழக்கை நிராகரிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், "நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர முடியும். காப்பிரைட் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாதம் வைத்தது.
அதற்கு தனுஷ் தரப்பில், "நானும் ரௌடிதான் படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னை வீனஸ் காலனியில் தான் அலுவலகம் இருந்தது எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தின் அத்தனை காட்சிகளும் தனக்கு சொந்தமானவை" என வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications