1975க்கு பிறகு.. மீண்டும் பள்ளிக்கு சென்ற 'நாசர்'! பழைய ஜோக்குக்கு இப்படி சிரிக்கிறாரே!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், நடிகர் நாசர் சிறுவயதில் பள்ளி கல்வியை முடித்திருந்தார். இந்நிலையில் இந்த பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய நண்பர்களை சந்தித்து நினைவுகளை நாசர் பகிர்ந்துகொண்டார்.
செங்கல்பட்டில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1975ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் பேட்சில் நடிகர் நாசரும் ஒருவர். இந்த பேட்ச் பள்ளியை முடித்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பழைய மாணவர்களை சந்திக்க ரீயூனியன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து 1975ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ளி என்றாலே சீருடையை தவிர்க்க முடியாது. அந்த வகையில் மீண்டும் ஒன்று சேர்ந்த மாணவர்கள் மஞ்சள் நிற டீசர்ட்டை யூனிபார்ம் போல அணிந்துக்கொண்டு வந்திருந்தனர். பள்ளி நண்பர்களின் பெயர்கள் மறந்திருக்கலாம், ஆனால் சேட்டை பிடித்த அந்த தோஸ்த்துகளின் முகங்களை எப்படி மறக்க முடியும்? இப்படியாக பள்ளி வந்த பழைய மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து, அன்பை பகிர்ந்துக்கொண்டனர். அப்புறம் என்ன பழைய நினைவுகள் பற்றிய பேச்சுதான்.
பழைய மாணவர்கள் ஒன்று கூடும் போது அவர்கள் பேசும் விஷயத்தை வைத்து நூறு நூறு கதைகள் எழுதலாம். அதுவும் நாசர் அந்த கேங்கில் இருக்கிறார் என்றால், கதை என்ன நாவலே எழுதலாம். பள்ளிக்கு வந்த நாசர் தனது நண்பர்களை பார்த்து ஆச்சரியத்தில் பிரமித்து போனார். விடலை பருவத்தில் வயதானவர்களை பார்த்து கலாய்த்திருப்பார்கள். ஆனால் இப்போது இவர்களே வயதானவர்களாக மாறியிருக்கிறார்கள். காலத்தின் கோலத்தை என்னவென சொல்வது?
நண்பர்களிடம் பேசி, பழைய ஜோக்குகளை மீண்டும் சொல்லி சிரித்து மகிழ்ந்த நாசர், ஆசியர்களிடம் ஆசீர்வாதம் பெற்று குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். பள்ளி காலத்தில் மறக்க முடியாத நண்பனாக இருந்தவர்களிடம் தனியாக செல்ஃபியும் நாசர் எடுத்துக்கொண்டார்.
பள்ளியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு புதிய மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. வாழ்க்கை பற்றிய தன்னம்பிக்கையையும், புரிதலையும், எதிர்காலத்தின் மீதான பற்றையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications