காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ வெள்ளியணை ராமநாதன் காலமானார்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெள்ளியணை ராமநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91. 1957-ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வென்ற குளித்தலை தொகுதியில், 1962 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 26 வயதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் வெள்ளியணை ராமநாதன்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டசபை தொகுதி 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது இத்தொகுதியின் முதல் சட்டசபை உறுப்பினராக தேர்வானவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. அந்த தேர்தலில் கருணாநிதியின் வெற்றிக்காக பாடுபட்டவர் வெள்ளியணை ராமநாதன். அவர் அப்போது அவர் வெள்ளியணை தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டார்.

பின்னர், காமராஜரால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தார் வெள்ளியணை ராமநாதன்.. 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் வெள்ளியணை ராமநாதன். அவரே வெற்றி பெற்று குளித்தலை தொகுதியின் 2-வது சட்டசபை உறுப்பினரானார். அந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு வயது 26.
1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் கரூர் மக்களவைத் தொகுதியிலும், 1980 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மருங்காபுரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் வெள்ளியணை ராமநாதன். காங்கிரஸ் கட்சியில் மாவட்ட துணை தலைவராகவும், விவசாய அணி செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக வெள்ளியணை ராமநாதன் காலமானார். அவருக்கு வயது 91. காங்கிரஸ் மூத்த முன்னோடி வெள்ளியணை ராமநாதன் மறைவுக்கு கரூர் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications