'பராசக்தி’ ஏன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி பேசவில்லை? - வெற்றிமாறன் சொன்ன சிறப்பான பதில்
சென்னை: தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. இதில் 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் தமிழில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
இத்தனை ஆயிரம் படங்களுக்கு மத்தியில் ஒரு படம் காலம் கடந்தும் மறக்க முடியாமல் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமான விஷயம் இல்லையா? அதுதான் 'பராசக்தி'. மு.கருணாநிதியின் வசனத்தால் மொத்த திறமையையும் வெளிப்படுத்திய திரைப்படம்.

பராசக்தி முன்வைத்த அரசியல்
1952 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 70 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதற்காக சென்னையில் இயங்கி வரும் 'ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்' ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இத்தனை ஆண்டுகள் கடந்து 'பராசக்தி' தனித்துத் தெரிவதற்கு என்ன காரணம்? அந்தப் படம் முன்வைத்த அரசியல் என்ன? - இப்படி பல்வேறு கருத்துகள் அலசப்பட்டன.
முதலில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ''பராசக்தி திரைப்படம் ஒரு தலைமுறையை தத்துவார்த்த சிந்தனையை நோக்கி நகர்த்திய படம் அல்லது ஒரு மாற்றத்தை நோக்கி நகர்த்திய படம் என்று நான் சொல்வேன். இப்படியான பல சிறப்பான பண்புகளைக் கொண்ட திரைப்படம் பராசக்தி.
அதாவது, இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக நடப்பதாக அந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்திய விடுதலை குறித்த விசயங்கள் எதுவும் அதில் இருக்காது. சமூக விடுதலையைப் பற்றி மட்டுமே அந்தப் படம் பேசும். 'அரசியல் அதிகாரம் மட்டுமே மக்களுக்கான நீதியைக் கொடுக்காது' என்ற அம்பேத்கரின் மேற்கோள்தான் இந்தப் படத்தை அண்மையில் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

மிகச் சிறந்த ஐந்து படங்களின் பட்டியல்
இன்றைக்கு சமூகப் பிரச்னைகளை முன்வைத்து யாரேனும் படம் எடுக்க வந்தாலும் அவர்களைப் பாதித்த 5 படங்களைப் பட்டியல் போட்டால் அதில் கட்டாயம் 'பராசக்தி' இடம்பெற்றிருக்கும். 'பராசக்தி'யைப் பொருத்தவரை அதில் பேசப்பட்டுள்ள கருத்துகள் இன்றைக்கும் தேவையானதாக உள்ளது. அந்தப் படம் முன்வைக்கும் விமர்சனங்கள், கேள்விகள் இன்றைக்கும்கூட முழுமையாக மாறிவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறோம்" என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சன், ''பராசக்தி படத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அன்றைக்கு இந்தப் படம் வெளியானபோது எத்தனை முறை பார்த்தேன் என்பது இப்போது நினைவில்லை.
இன்றைக்கு எவ்வளவோ தூரம் கடந்து வந்துள்ளோம். அரசியல் புரிதல்கள் எவ்வளவோ முன்னேறியுள்ளது. இப்போது 'பராசக்தி'யைத் திரும்பவும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இந்தப் படத்தில், 'பிச்சைக்காரர்கள் எல்லாம் மந்திரி ஆகிவிடுவார்கள்' என கருணாநிதி சொல்லி இருப்பதைச் சாதாரணமாகக் கடந்து போக முடியவில்லை.

அரசியலுக்குப் பயன்பட்ட கலை
அன்றைக்கு நம்மையெல்லாம் அப்படித்தானே உயர் வகுப்பினர் சொல்லி இருப்பார்கள்? அவர் வேறு யாரையும் சொல்லவில்லை. நம்மைத்தான் சொல்லியிருக்கிறார். 'உஸ்' என்றால் ஓடியவன் எல்லாம் இன்று நம்மை எதிர்த்துப் பேசுகிறான் என்று ஒரு வசனம் வருகிறது.
ஆக, கலை என்ற ஒரு வடிவத்தை எடுத்துக் கொண்டு அதன்வழியே நமது அரசியலைப் பேசுவது என்பதை கலைஞர் கருணாநிதி மிகச் சரியாக செய்துள்ளார்" என்றார்.
இந்த இருவரின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பேசினார், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அவர் பேசும்போது, ''திராவிட இயக்கப் படங்களில் திருப்புமுனையான திரைப்படம்தான் 'பராசக்தி'. ஒருமுறை இந்தப்படம் பற்றி இயக்குநர் பஞ்சு அருணாச்சலம் கூறும்போது, 'சமூகம் வைத்திருந்த அத்தனை மூடத்தனங்களையும் இப்படம் மூலம் அசைத்துவிட்டோம்' என்றார்.
மீண்டும் இன்றைக்கு இதனைப் பார்க்கும்போது, அது மதமாக இருக்கட்டும் சமூக மதிப்பீடுகளாக இருக்கட்டும். அத்தனை விஷயங்களையும் இந்தப் படம் கேள்வி எழுப்பியிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்தப் படத்தை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரு முழுமையை உணர முடிகிறது. அது நடிப்பாக இருந்தாலும் வசனமாக இருந்தாலும் இயக்கமாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு முழுமை இருக்கிறது. அதுவே இதன் வெற்றி என்று சொல்லத் தோன்றுகிறது.

திராவிட மாடலின் முதல் புள்ளி
குறிப்பாக, இப்படம் நம்மிடம் வழமையாக இருந்த அனைத்தையும் உடைத்துள்ளது. ஒரு பெண் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தைப் பார்த்து கேள்வி கேட்கக்கூடாது. எதிர்த்துப் பேசக்கூடாது என்ற நிலைமையே நிலவியது. அப்படியான காலத்தில் இப்படத்தின் நாயகி, நாயகனைப் பார்த்து 'உனக்கு அன்பு இருக்கின்ற அளவுக்கு அறிவு இல்லை' என்று சொல்லும்படியான வசனம் ஓர் இடத்தில் இடம்பெறுகிறது.
இன்றைக்கும்கூட ஆண் சமூகமானது பெண் மீது அன்பு செலுத்துவதாகக் கூறிக்கொண்டு அடக்குமுறையையே பிரயோகித்து வருகிறது. இந்தப் படம் பேசிய பல்வேறு விஷயங்களை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை ஒழிக்க பல்வேறு திட்டங்களைப் போட்டுள்ளது. அதனை முன்னெடுத்து செய்து முடித்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உதாரணமாக, பிச்சைக்காரர்கள் ஒழிப்பு, ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது ஆகிய திட்டங்களைச் சொல்லலாம். இந்தப் படத்தில் இருந்துதான் 'திராவிட மாடல்' என்பது வெளிப்பட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றி நாம் இன்று ஆராயும்போது ஒரு விஷயம் முக்கியமானதாக உள்ளது. இந்தப் படம் தைரியமாகப் பேசி உள்ளதைப் போல நாமும் இன்றைய அவலங்களை மிகத் தைரியமாகப் பேச வேண்டும். தயங்கக் கூடாது. அதுவே இப்படம் நமக்குக் கற்றுத்தரும் பாடம்" என்றார்.

வசனத்துக்கு முக்கியத்துவம் தந்த பராசக்தி
கருத்தரங்கில் நிறைவாகப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "அந்தக் காலத்துப் படங்கள் பெரும்பாலும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தன. அதை மாற்றி வசனத்துக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம்தான் 'பராசக்தி'.
கலைஞர் கருணாநிதியின் சிறப்பு என்னவென்றால் அவரது ஆயுதங்களை அவர் எப்போது கூர்மழுங்காமல் வைத்திருப்பார். அவருக்குச் சின்ன வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைப் பயன்படுத்துவார். அப்படித்தான் அவரது எழுத்து ஆயுதத்தை இந்தப் படத்தில் கூர்மழுங்காமல் பயன்படுத்தி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும், 'கல்யாணி மங்களகரமான பெயர்' என்று. 'கல்யாணி' சம்பூரணமான ராகம். ஒரு முழுமையான ராகம். இசைக்கான அத்தனை சுரங்களும் நிரம்பியது கல்யாணி. ஆனால், படத்தில் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு அந்தப் பெயரைக் கலைஞர் வைத்திருப்பார்.

கலைஞரின் முனை மழுங்காத ஆயுதம்
அதேபோல, ஒரு குழந்தைக்கும் பெயர் வைக்கும் காட்சியில் விவாதம் எழும். ஆண் பிள்ளையாக இருந்தால், 'பன்னீர்செல்வம் பெயரை வைக்க வேண்டும். பெண் பிள்ளையாக இருந்தால், நாகம்மை எனப் பெயர் வைக்க வேண்டும்' என்று எழுதியிருப்பார்.
அந்த ஒரு சிறிய வசனத்தில்கூட, தன் கொள்கை ஆயுதத்தைக் கூர்மழுங்காமல் பயன்படுத்தியதில் அவரை அடித்துக்கொள்ள முடியாது. அந்தக் காட்சியில் அவரைப் பொருத்தவரை அது பெயர் கிடையாது. அது ஒரு குறியீடு" என்றார்.
உண்மைதான், 'பராசக்தி' படமல்ல; குறியீடு.
-
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications