சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறக்க தற்காலிக தடை! நீலாங்கரை போலீஸார் நோட்டீஸ்!
சென்னை: சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி யுனிவர்சல் கிங்டம் எனப்படும் பொழுதுப்போக்கு பூங்காவை திறக்க நீலாங்கரை போலீஸார் தற்காலிக தடை விதித்துள்ளனர். நேற்றைய தினம் டாப் கன் ராட்டினத்தில் சென்ற 36 பேர் அந்தரத்தில் தொங்கியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது விஜிபி பொழுதுபோக்கு பூங்கா. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இங்குள்ள சிலை மனிதனுடன் நின்று புகைப்படம் எடுப்பர். மேலும் அங்குள்ள சாகச விளையாட்டுகளையும் விளையாடுவது வழக்கம்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் இந்த பொழுதுபோக்கு பூங்காவுக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் அங்குள்ள சாசக ரைடுகளில் விளையாடி மகிழ்ந்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு டாப் கன் எனும் ராட்சத ராட்டினத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 36 பேர் ஏறினர்.
அது பல்டி அடிக்கும் விதத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரைடு ஆகும். இதில் ஏறி அமர்ந்ததும் ஒரு சுற்று சுற்றியதும் அப்படியே அந்தரத்தில் நின்றது. சுமார் 50 அடி உயரத்தில் ராட்டினம் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் காப்பாற்றுங்கள் என அலறினர். இதையடுத்து நிர்வாகம் சார்பில் அவர்களை மீட்க கிரேன் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதனால் 3 மணி நேரமாக அந்தரத்தில் பயணிகள் தவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து குழந்தைகளையும் பெண்களையும் முதலில் மீட்டுவிட்டு பிறகு ஆண்களை மீட்டனர். இதனால் பல குழந்தைகள் பயத்தில் அழுதனர். பெண்களும் கலங்கியிருந்தனர். குழந்தைகளுடன் வந்திருக்கிறோமே அந்தரத்தில் இருந்து விழுந்தால் என்ன ஆவது என்ற எண்ணமும் அவர்களுக்கு எழுந்தது.
இத்தனை பெரிய சம்பவம் நடந்தும் போலீஸாருக்கு விஜிபி நிர்வாகம் தாமதமாகவே தகவல் கொடுத்ததால் சொல்லப்படுகிறது. இதனால் விஜிபி பூங்காவை திறக்க தற்காலிக தடை விதித்து நீலாங்கரை போலீஸார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
பொது மேலாளரிடம் வழங்கப்பட்ட நோட்டீஸில் ரைடுகளுக்கான அனுமதி ஆவணங்கள், ராட்டினம் பழுதுக்கான காரணம் என்ன, நீலாங்கரை போலீஸாருக்கு தாமதமாக தகவல் கொடுத்தது ஏன், ராட்டினத்தில் சிக்கியவர்களை மீட்க நிர்வாகம் தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது உள்ளிட்ட விளக்கங்களை அளிக்க பொது மேலாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அந்த விளக்கத்தை பொறுத்து பூங்காவை திறக்க அனுமதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications