இனி கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேச அனுமதி!.. அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிறைவாசிகளுக்கு ஆடியோ கால் வசதி உள்ளதை போல் வீடியோ கால் வசதிகளும் இருக்கும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சிறைவாசிகளின் உணவு முறையில் மாற்றம் செய்யப்படும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி புதிய உணவு திட்டத்தை புழல் மத்திய சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அதில் ஞாயிற்றுக்கிழமை காலை உணவாக இனி கோதுமை உப்புமா, திங்கள்கிழமையில் காலை உணவாக பொங்கல் சாம்பார், செவ்வாய்க்கிழமைகளில் ராகி உப்புமா, உருளைக்கிழங்கு மசாலா, புதன்கிழமைகளில் தக்காளி சாதமும் முட்டையும் வழங்கப்படும்.
அது போல் வியாழக்கிழமை எலுமிச்சை சாதமும் வெள்ளிக்கிழமை இட்லி சாம்பாரும் சனிக்கிழமைகளில் புதினா சாதமும் வழங்கப்படும். மேலும் வாரத்திற்கு இரு நாட்கள் வழக்கம் போல் அசைவ உணவு வழங்கப்படும் என புதிய உணவு முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பி கிளாஸ் சிறைவாசிகளுக்கு நாள் ஒன்று ரூ 96 லிருந்து 135 ரூபாயாக செலவு உயர்த்தப்பட்டுள்ளது. அது போல் ஏ கிளாஸ் சிறைவாசிகளுக்கு ஒரு நாளைக்கு உணவுக்காக 146 ரூபாயிலிருந்து 207 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் குற்றவாளிகள் ஏ கிளாஸ் குற்றவாளிகள் ஆவர்.

அது போல் மதியம் சிக்கன் கிரேவி, மாலையில் சூடான டீ, சுண்டல், சாப்பாத்தி சென்னா மசாலா ஆகியவை வழங்கப்படும். சிறைவாசிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ 26 கோடி கூடுதல் செலவில் மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தமிழக சட்டசபையில் சிறைத் துறை மானியக் கோரிக்கையின் போது கூறியிருந்தார். அந்த அறிவிப்பைத்தான் புழல் சிறையில் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அனைத்து சிறைகளிலும் நூலக வசதி கொண்டு வரப்படும் என்றும் ஒவ்வொரு சிறையிலும் கைதிகளுக்கு ஆடியோ கால் வசதி வழங்கப்படுவதை போல் தற்போது வீடியோ கால் வசதியும் வழங்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆடியோ கால் வசதி 3 நாட்களுக்கு ஒரு முறை என இருப்பதை இனி மாதத்திற்கு 10 முறை என உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 134 சிறை வளாகங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அவர்களுடைய உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி காய்கறி, கீரை வகைகள் சேர்க்கப்பட்டன.












Click it and Unblock the Notifications