துணிவோட வாரிச கொண்டாடுங்க நண்பா.. மதுரையில் ஒன்றான தல தளபதி பேன்ஸ்! அஜித் - விஜய் படத்துடன் போஸ்டர்
சென்னை: வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று ஒரே நாளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், விஜய், அஜித் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் இணைந்து ஒட்டி இருக்கும் போஸ்டர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒன்றாக வெளியாகி உள்ளன.
கடந்த சில வாரங்களாகவே வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் தொடர்பான பேச்சுக்களும், ரசிகர்களுக்கு இடையிலான வாக்குவாதங்களும் பேஸ்புக், ட்விட்டரை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

விஜய், அஜித் ரசிகர்கள்
தங்களுக்கு பிடித்தமான நடிகர்களையும் அவர்கள் நடித்துள்ள திரைப்படங்களின் பெயர்களையும் வைத்து பாடல்கள், டிரைலர்கள் வெளியாகும் நேரத்தில் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தார்கள். அத்துடன் அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் விமர்சித்து வந்ததும் அதிகமாக இருந்தது.

திரைப்பட விமர்சனங்கள்
கடந்த சில வாரங்களாகவே இந்த ஹேஷ்டேக்குகள் மாறி மாறி தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னிலை வகித்து வந்தன. குறிப்பாக நேற்று திரைப்படம் ரிலீசான நிலையில் திரைபடங்களின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து இருக்கின்றன.

அணிவகுக்கும் போஸ்டர்கள்
சமூக வலைதளங்கள் ஒருபக்கம் இருந்தால், மறுபக்கம் பழைய, போஸ்டர், பேனர், கட் அவுட் கலாச்சாரத்தில் இருந்து ரசிகர்கள் விடுபடவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களின் சுவர்களிலும் அஜித், விஜய் ரசிகர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். இதில் தங்கள் ஆஸ்தான நடிகர்களை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டி இருப்பதைபோல் அவருக்கு போட்டியான நடிகை கீழ்தரமாக விமர்சிக்கும் வகையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

கட் அவுட்டுகள்
அதேபோன்று பல இடங்களில் உயரமான கட் அவுட்டுகளை வைத்து அதன் மீது ஏறி ஆபத்தான முறையில் மாலை அணிவித்தனர். நேற்று சென்னையில் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே 18 வயது அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீது ஏறி நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை
அஜித், விஜய்க்கு இருக்கும் தீவிர ரசிகர்களின் காரணமாக இவர்களின் திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்று விடுகின்றன. இதனால் இந்த நடிகர்களின் சம்பள தொகையும் பல கோடிகளை தாண்டி உயர்ந்துகொண்டே இருக்கிறது. ரசிகர்களின் செயல்கள் கொண்டாடும் வகையில் இருந்தாலும், பல சமயங்களிலும் மக்களை தொந்தரவு செய்யும் வகையிலும், சட்ட ஒழுங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

மதுரையில் ஒற்றுமை
விஜய், அஜித் ரசிகர்கள் என்றாலே எதிரும் புதிரும் என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், மதுரையில் அனைவரையும் வியக்க வைக்கும் செயலை செய்து உள்ளார்கள் விஜய் அஜித் ரசிகர்கள். ஆம், இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையே வெற்றி என்று குறிப்பிட்டு அஜித், விஜய் படங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள். அதில், "வாரிசு/ துணிவு-னு அடிச்சுக்காம.. துணிவோட வாரிச கொண்டாடுங்க நண்பா..!" என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications