சொன்னதெல்லாம் செய்வாரா "முதல்வர்" விஜய்.. பெண்களுக்கு 2500, 6 இலவச சிலிண்டர் கிடைக்குமா?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. 118 என்ற மேஜிக் நம்பரைத் தொட இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, விஜய் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துவாரா? குறிப்பாக பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போதே எழுந்துள்ளது.
விஜய்யின் தேர்தல் அறிக்கையில் மக்களைக் கவர்ந்த மிக முக்கியமான அம்சம் மகளிருக்கான உரிமைத் தொகை ஆகும். தற்போது நடைமுறையில் உள்ள 1000 ரூபாய் திட்டத்தை விடப் பல மடங்கு அதிகமாக, தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். 110-க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ள சூழலில், இல்லத்தரசிகள் அனைவரும் இந்த 2500 ரூபாய் திட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இது தவிர, தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் இதோ:

- கல்வி மற்றும் நீட் தேர்வு: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து, முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது.
- இலவசக் கல்வி: அரசுப் பள்ளிகளின் தரத்தைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வியை முழுமையாக இலவசமாக வழங்குவது.
- வேளாண்மை: விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உறுதி செய்வது மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான திட்டங்கள்.
- மதுவிலக்கு: தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவது.
- ஊழலற்ற நிர்வாகம்: அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க டிஜிட்டல் முறையை முழுமையாக அமல்படுத்துவது.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை விஜய் நெருங்கியுள்ள நிலையில், இந்த நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை அவர் எவ்வாறு திரட்டப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், விஜய்யின் "சொன்னதைச் செய்வோம்" என்ற பிம்பம் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெக பெற்றுள்ள இந்த அசுர ஆதரவு, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications