“திமுக வேட்பாளர் பங்களா பண்ணையார் கிடையாது!” பெரம்பூரில் உதயநிதி ஸ்டாலினின் அனல் பறந்த பிரச்சாரம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களமிறங்கயிருப்பதால், பெரம்பூர் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "உங்களுக்கு சோம்பேறி அட்டை கத்தி வேண்டுமா? அல்லது சுறுசுறுப்பு வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரசியல் தலைவர்கள் தீயாய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், விஜய் மட்டும்தான் அடிக்கடி பிரச்சாரத்தை ரத்து செய்து வருகிறார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கேள்வி கவனம் பெற்றிருக்கிறது.

பெரம்பூர் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "ஆர்.டி. சேகர் பெரம்பூர் மக்களுடன் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 'மண்ணின் மைந்தன்'. ஆனால், பெரம்பூருக்கும் பெரம்பலூருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் இங்கு வந்து ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
புதிய கட்சிகளை திருவிழாக் கடைகளில் வைக்கப்படும் அட்டை செட்கள் போன்றவர்கள். காற்று அடித்தால் அவை கீழே விழுந்துவிடும், தேர்தல் முடிந்ததும் பங்களாவிற்குள் சென்று ஒளிந்துகொள்வார்கள்.
ஆர்.டி. சேகரை ஒரு போன் செய்தால் அழைக்கலாம், ஆனால் மற்றவர்கள் வெற்றி பெற்றால் 30 கி.மீ தூரம் சென்று பங்களா வாசலில் காத்து நிற்க வேண்டியிருக்கும். தொகுதி மறுவரையறை மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்தி, நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து நின்றவர் முதல்வர் ஸ்டாலின் தான். எனவே, ரீல் ஹீரோக்களை நம்பாமல் ரியல் ஹீரோவான ஸ்டாலினை நம்புங்கள்" என்று விஜய்யை மறைமுகமாக தாக்கி உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications