எம்ஜிஆருக்கு பிறகு ஒரு வாள்.. விஜய்யை குறிப்பிட்ட அமீர்! ஆனா.. இது மிஸ் ஆகுதே!
சென்னை: "எம்.ஜி.ஆர் என்ற வாளை அண்ணா என்னும் போர் வீரன் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார். அவருடைய திராவிட சிந்தனைகளையும், கருத்துகளையும் எம்.ஜி.ஆர் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார் அண்ணா. அப்போது வீரன் சரியாக இருந்ததால் அந்த வாளும் சரியாக பயன்பட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு கூர்மையான ஒரு வாள் இப்போது கிளம்பியுள்ளது. ஆனால், அந்த வாளைப் பயன்படுத்துவதற்கான சரியான போர்வீரன் இப்போது இல்லை" என்று திரைப்பட இயக்குநர் அமீர் கூறியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது, "எம்ஜிஆர், விஜயகாந்த் வரும்போது தனியாகதான் வந்து அவர்களுடைய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். நடிகர்களும் சமூகத்தில் ஒருத்தவங்கதான். பெரும்பான்மையான மக்களுடைய அன்பை பெற்றவர்கள். அவர்களை அரசியலுக்கு வரக்கூடாது என்று நாம சொல்லக்கூடாது.

நான் நேற்றைக்கு ஒரு விவாதத்தில் சொன்னதுதான், இப்ப திரும்பவும் சொல்றேன். எம்ஜிஆர் லட்சக்கணக்கான மக்களுடைய அன்பைப் பெற்ற ஒருவர். அவரை அண்ணா கருவியாக பயன்படுத்திக்கொண்டார். அந்த வாளை அண்ணா கைல எடுத்துக்கிட்டு, அண்ணா என்ற போர் வீரன் ரொம்ப சரியா பயன்படுத்தியதாகத்தான் நான் பார்க்குறேன்.
திராவிட கருத்துக்களை, சிந்தனைகளை எம்ஜிஆர் மூலமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். அப்போது அந்த வீரன் சரியாக இருந்தால், அந்த வாளும் சரியாக பயன்பட்டது. அதேபோல ஒரு வாள் இப்போது கிளம்பி இருக்கு. எம்ஜிஆர் பிறகு, சக்தி வாய்ந்த கூர்மையான ஒரு வாள் மீண்டும் கிளம்பியுள்ளது. ஆனால், அந்த வாளை பயன்படுத்துவதற்கான சரியான போர் வீரன் இல்லை. எது சரி எது தவறு என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் சரியானவற்றை தேர்ந்தெடுப்பார்கள். வாள் தவறானவர்கள் கைகளுக்கு போய்விட்டால் சிக்கல்தான்.
தமிழ் தேசியம் என்பது எனக்கான விருப்பம். ஆனால், என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நான் முதல்ல இருக்கனும். தமிழ் தேசியத்தை அடைய, என்னுடைய மொழியை, என்னுடைய இனத்தை காக்கணும்னு சொன்னா நான் இருக்கணும். நான் இருக்குறதுக்கே இங்க பிரச்சனையாக ஒரு சக்தி வருது அப்படின்னு சொன்னா, அதை எதிர்ப்பதுதான் என்னுடைய முதன்மை நோக்கமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications