"யார் தீய சக்தி.. பாஜக தான் தீய சக்தி உங்க அறிவுக்கு படலையா மிஸ்டர் விஜய்?" ஆவேசமான மன்சூர் அலிகான்
சென்னை: இன்று ஈரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவைத் தீய சக்தி என விமர்சித்திருந்தார். இதற்கிடையே விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்த, திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய நினைத்த பாஜக தீய சக்தி இல்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களில் அரசியல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திவிட்டன. அதன்படி இன்றைய தவெக சார்பில் ஈரோட்டில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் திமுகவைக் கடுமையாக விமர்சித்தார்.

தீய சக்தி திமுக
குறிப்பாக அதிமுக தலைவர்கள் திமுகவைத் தீய சக்தி எனக் குறிப்பிட்டது போலவே விஜய்யும் திமுகவைத் தீய சக்தி எனக் குறிப்பிட்டார். மேலும், தவெக ஒரு தூயசக்தி எனக் குறிப்பிட்ட அவர், இங்கே தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையில்தான் போட்டி என்று அவர் கூறியிருந்தார். இதற்கிடையே விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியுள்ளது. பல்வேறு தரப்பினரும் விஜய் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்த, திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய நினைத்த பாஜக தீய சக்தி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவை ஆளக் கூடிய பாஜக தீயசக்தி. 2014-ல் இருந்து E.V.M வச்சு பதவியை விட்டு இறங்காம, பாசிச ஆட்சி நடத்துகிறார்களே அது உங்க கண்ணுக்கு தெரியலையா விஜய்! இல்ல எஜமான விசுவாசமா?
மன்சூர் அலிகான் பதிலடி
நீட் தேர்வை யாரு கொண்டு வந்தா? தீயசக்தி பாஜக இல்லையா விஜய்? 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தி பெயரை ஒழித்து, நிதியும் ஒதுக்காமல் களவாணித்தனம் செய்கிற பாஜக தீயசக்தி இல்லையா விஜய்? திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டைக் கபளீகரம் பண்ணி ரத்த ஆறு ஓட வைக்க நினைத்த பாஜக தீயசக்தி இல்லையா? பாதுகாத்த திமுக அரசு உன் கண்ணுக்கு தீயசக்தியா விஜய்?
எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் வித்து ஏப்பம் விட்டு விட்டு, இந்தியாவுக்கென்று சொந்தமா ஒரு ஏர்லைன்ஸ் கூட இல்லாத நாடா, மக்களை பிச்சைக்காரங்களா மாற்றிய பாஜக தீயசக்தியா தெரியலையா விஜய்? ஒரு சாமியாரால் நடத்தப்படுகிற இண்டிகோ 1,000 விமானங்கள் திடீர்னு கேன்சல் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு, உலகமே இந்தியாவைக் காறி துப்புச்சே, அப்ப பாஜக ஒரு தீயசக்தியா தெரியலையா மிஸ்டர் விஜய்?
யார் தீய சக்தி
SIR அமல்படுத்தி EVM மூலம், அயோக்கியத்தனம் பண்ணி, பீகார், மஹாராஷ்டிரா, ஹரியானா என்று தேர்தல் ஆணையரை அவங்க வீட்டு வேலைக்காரனா மாத்தி, அதுக்குன்னே சட்டத் திருத்தம் செஞ்சு, டெல்லியில் உட்கார்ந்து அம்பேத்கர், பெரியார் சிலைகளைக் கூட உடைக்கனும்னு துடிக்கிற தீயசக்தி பிஜேபி'ன்னு உங்கள் அறிவுக்கு படலையா விஜய்? இது மாதிரி 100 கேள்விகள் இருக்கு. அதனை பொதுவெளியில் பேச நான் தனியாக வாரேன்.. அதே போல நீங்கள் தயாரா விஜய்?
தூய சக்தி யார்
மனப்பாடம் செய்து காச்சு மூச்சுண்ணு கத்தினாலும், நீங்கள் எம்ஜிஆர், அண்ணா ஆக முடியாது. Y, G என எந்த பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் தான் எனக்கு பாதுகாப்புன்னு வாங்க. தோள் கொடுப்பான் தோழன். பாவம் பச்சை புள்ளைங்க நிலாவ பிடிக்க ஆசைப்படக் கூடாது. உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நீங்க நல்லா டான்ஸ் ஆடி நடிக்கறதத் தான் விரும்புவாங்க! சீமான் ஒரு பக்கம் நெஞ்சு வெடிக்க கத்தறது பத்தாதுண்ணு... நீங்க வேற நெஞ்சு புடைக்க கத்தாதீங்க! பாஜகவையும், மதவாதத்தையும் ஒழியுங்கள்! தூய சக்தி தமிழக மக்கள் தான். அவங்க முடிவு அதிரடியா இருக்கும்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் நீங்க, நிதிஷ் குமார் பர்தாவ நீக்கிய சம்பவம் குறித்து கேக்க மாட்டீங்களா? சட்டம் ஒழுங்குனா என்ன விலையென்று கேட்குதே மோடி அரசு. அவர்களுடன் ஒருமுறை விமானத்தில் சென்று வாருங்கள் என் அன்புத் தம்பி விஜய். 250 நாட்டுக்கு உங்கள் பிரதமர் மோடி போனாரே, அது அதானி கம்பெனிக்கு வியாபார ஒப்பந்தம் போடத் தான் என்பதுகூட தெரியாத நல்ல சக்தியா.. அப்பாவியா இருக்காதப்பா விஜய்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications