விஜய்யால் 2026ல் அதிகார மையத்தை நெருங்கவே முடியாது என அவருக்கே தெரியும்.. அலசும் ராஜகம்பீரன்!
சென்னை: "2026 சட்டசபை தேர்தலில் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர அதிகார மையத்தை நெருங்க முடியாது என்பது தவெக தலைவர் விஜய்க்கு நன்றாகவே தெரியும்." என அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை அன்று மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் உரையாற்றுகையில், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு குறித்து அலசுகிறார் மூத்த அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன்.

ராஜகம்பீரன் பேட்டி
ஒன் இந்தியாவுக்கு ராஜகம்பீரன் அளித்துள்ள பேட்டியில் பேசுகையில், "தமிழ்நாட்டு அரசியலில் அதிமுக பிளவு பட்டு, வாக்கு வங்கிகள் தென் மாவட்டங்களில் சிதறிப்போயுள்ள நேரத்தில் வலிமை குறைந்துள்ளது. 40% வாக்குகளை எட்டுகிறவர்கள் தான் அதிகார மையத்தை அடைய முடியும் என்ற எழுதப்படாத விதியின் கீழ் அதிமுக இல்லை. 20% ஆக பாதிக்கும் குறைவாக வந்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமியை நம்பி வருவதற்கு எந்த தலைவர்களும் தயாராக இல்லை.
தமிழ்நாட்டின் பெரிய சக்தியாக இருந்த அதிமுகவின் இரண்டாவது இடத்தை அடைய எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். பாஜக, நாம் தமிழர் கட்சி என பலரும் முயற்சி செய்கிறார்கள். அந்த இடத்தில் தான் விஜய் வந்து நிற்கிறார். திமுகவுக்கு எதிர்க்கட்சியாக வந்து நிற்கிறோம் என்ற கருத்தை நிறுவுகிறார் விஜய். அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் படை திரள்கிறது. கட்டுக்கடங்காத, கட்டுக்கோப்பு இல்லாத கூட்டம் அவருக்கு பின்னால் இருக்கிறது. தரையில் இருந்து பேசும்போதே, திரையில் இருந்து பேசுவது போல தவெக தலைவரே நினைக்கிறார்.
அரசியலில் டூப்
சினிமாவில் ஒரிஜினல் சண்டை மாஸ்டர்கள் தன் விழுவார்கள். ஆனால், உண்மையாக விழுவதற்கு கதாநாயகன் அச்சப்படுவார். அவருக்கு டூப் போடுவார்கள். அரசியலில் உண்மையாகவே பயிற்சி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். சினிமா சண்டைக் காட்சியில் டூப் போடுபவரை எப்படி விஜய் என நம்ப வைப்பார்களோ அதைத்தான் அவர் அரசியலில் செய்கிறார்.

அண்ணா உருவாக்கிய திமுக இன்றைக்கும் மிக வலிமையான கட்சியாக இருக்கிறது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இன்றைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. இரு தலைவர்களுக்கும் இன்றைக்கும் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் வாக்குகளை பிரிக்க முடியுமே தவிர அதிகார மையத்தை நெருங்க முடியாது என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும்.
விஜய்யின் பலவீனம்
மாநாட்டில் நம்மை விரும்புபவர்களை திரட்டுவதும், தேர்தல் அரசியலில் களத்தில் இறங்கி ஆதரவு பெறுவதும் வேறுபட்டது. விஜய்யின் மிகப்பெரிய பலவீனம், கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் தான் முக்கியமானவர்கள். 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என விஜய் சொல்கிறார் என்றால் அங்கேயே அவர் வீழ்ந்துவிட்டார்." எனத் தெரிவித்துள்ளார் ராஜகம்பீரன்.












Click it and Unblock the Notifications