"நான்தான்மா விஜய்" கரூரில் 41 பேரின் குடும்பத்தினருடன்! 10 நாள் கழித்து வீடியோ காலில் Vijay ஆறுதல்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி 10 நாட்கள் ஆன நிலையில் அவர்களில் 20 குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் நேற்று மாலை முதல் பேசி ஆறுதல் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 20 பேரின் வீடுகளுக்குச் சென்ற தவெக நிர்வாகிகளின் போனில் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தாராம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் கடந்த 27 ஆம் தேதி நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் இதுவரை கரூருக்கு விஜய் நேரடியாக செல்லவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யின் ஆலோசனையின் பேரில் 2 தவெக நிர்வாகிகள் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேராக செல்கிறார்கள். அங்கு அந்த நிர்வாகிகளுக்கு விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் பேசுகையில், "உங்களது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. உங்களில் ஒருவனாக நான் துணையாக இருப்பேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்" என தெரிவித்து வருகிறாராம்.
வீடியோ கால்
மேலும் விஜய் வீடியோ கால் மூலம் பேசுவதை வீடியோவாகவோ போட்டோவாகவும் எடுக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளாராம். அது போல் நிர்வாகிகளும் விஜய் பேசியது குறித்து யாரிடமும் பகிர வேண்டாம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாராம். ஓரிரு நாளில் 41 பேரிடமும் விஜய் வீடியோ காலில் பேசி முடிப்பார் என சொல்லப்படுகிறது.
41 பேர் இறப்பு
கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி பலியான சோகம் சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் தமிழக மக்கள் நெஞ்சில் ஆறாத வடு போல் உள்ளது. கேட்கும் நமக்கே நெஞ்சு பதறுகிறது என்றால் இறந்தவர்களின் உறவினர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
கோர காட்சிகள்
பலரது உயிர் உறவினர்களின் கண் முன்னே போன கொடூரமும் நடந்தது. இத்தனை கோர காட்சிகளும் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டிய விஜய், அங்கு இல்லாமல் அவசர அவசரமாக சென்னைக்கு வந்துவிட்டார்.
3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ
அதன் பிறகு சென்னை வீட்டை விட்டு வெளியே வராத அவர், ஒரு நாள் கழித்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்றிருந்தார். பின்னர் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
வேதனை வலி
அந்த வீடியோவில் "கரூர் சம்பவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனையையும் வலியையும் தந்துவிட்டது. 41 பேர் இறப்பு என்பது அவர்களது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கரூரில் மக்கள் இறந்து கொண்டிருந்த போது நான் எப்படி அங்கிருந்து வெளியேற முடியும்? நானும் மனிதன்தானே!
கரூருக்கு வராதது ஏன்
நான் கரூருக்கு மீண்டும் வரலாம் என இருந்தேன். ஆனால் நான் அங்கு வருவதால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பிரச்சினையை கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்பதால்தான் நான் வரவில்லை. விரைவில் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன்" என விஜய் பேசியிருந்தார்.
ஹஸ்கி வாய்ஸில் விஜய்
இந்த வீடியோ குறித்து பலர் விமர்சனம் செய்திருந்தனர். வீடியோவில் சோகம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஃபில்டர் பயன்படுத்தாமல் ஹஸ்கி வாய்ஸில் பேசியிருக்கிறார் என விமர்சனத்தை முன் வைத்தனர். கரூர் சம்பவம் நடந்து எத்தனை நாள் ஆச்சு, ஆனாலும் விஜய் கரூர் மக்களை நேரில் சந்திக்கவில்லை. அவர் அறிவித்த நிவாரணமான தலா ரூ 20 லட்சத்தையும் இதுவரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள போதிலும் விஜய் வீடியோ காலில் பேசுவதை வெளியே சொல்ல வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது ஏன் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications