விஜய் ரொம்ப இளைச்சிட்டாரு! சரியா சாப்பிட்டாரானு தெரியலை! கரூர் பெண் வேதனை
சென்னை: கரூரில் 41 பேர் இறந்த மன உளைச்சலால் விஜய் ரொம்ப இளைச்சி போயிட்டாரு, அவர் சரியா சாப்பிட்டாரா இல்லையானு கூட தெரியலை என மாமல்லபுரத்தில் விஜயிடம் ஆறுதல் பெற்ற பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அவர்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்த விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வு நேற்று மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக 41 பேரின் குடும்பத்தினர் 5 சொகுசு பேருந்துகளில் கரூரில் இருந்து சென்னை மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அங்குள்ள ரிசார்ட்டில் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று திங்கள்கிழமை காலை 10 மணிக்கு விஜய் அந்த ரிசார்ட்டிற்கு வந்திருந்தார். அங்கு தனித்தனியாக ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. இதனால் உள்ளே விஜய் என்ன பேசினார், எப்படி ஆறுதல் கூறினார் என்பது குறித்தெல்லாம் தெரியாத நிலை இருந்தது. 8 மணி நேர சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பத்திரமாக கரூருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அந்த வகையில் கரூர் திரும்பிய பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய் எங்கள மாமல்லபுரத்திற்கு கூட்டிட்டு போய் எல்லா வசதியும் செஞ்சு தந்தாரு. ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியா பாத்தாரு.
எங்கள பார்க்க 11.30 மணி ஆகிடுச்சி. ஒரு மணி நேரமா எங்க கிட்ட பேசினாரு. அந்த அறையில் எந்த பாதுகாவலரும் இல்லை, வீடியோ எடுக்குறவங்களும் இல்லை. உள்ளே போனதும் உடனே என்ன மன்னிச்சிடுங்கன்னு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அழுதாரு!
நாங்களும் குழந்தைகள கூட்டிட்டி போனது தப்புனு அவர்கிட்ட மன்னிப்பு கேட்டோம். இந்த மன உளைச்சலால ரொம்ப இளைச்சி போயிட்டாரு விஜய். அவர் சரியா சாப்பிட்டாரானு தெரியலை.
அப்புறம் எங்ககிட்ட "உங்க குடும்பத்துல ஒருத்தரா என்னை நினைச்சிக்கோங்க"னு சொன்னாரு. அவருக்கு இவ்வளவு செலவு செய்யணும்னு அவசியமே இல்லை. அவர் உழைச்சு சம்பாதித்த பணத்தில் எங்களை கரூரில் இருந்து கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்து விட்டாங்க. நாங்கள் செஞ்சதுதான் தப்பு! குழந்தைகளை கூட்டிட்டு போயிருக்கக் கூடாது என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு விஜய் நேரில் போய் ஆறுதல் சொல்லவில்லை. அவர் அண்மையில் வீடியோ காலில் கூட கரூருக்கு விரைவில் வருவதாக கூறியிருந்த நிலையில் அவரோ செல்லவில்லை. நிவாரணத்தை கொடுக்க நேரில் வருவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் விஜய்யோ அதை ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்துவிட்டார். 30 நாட்களான நிலையில் கரூர் மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து காலில் விழுந்து ஆறுதல் தெரிவித்துள்ளார். துக்க நிகழ்ச்சி நடந்தவரின் வீட்டிற்குச் சென்றுதான் ஆறுதல் கூறுவது தமிழர் பண்பாடு, ஆனால் விஜய் அதை மீறி ஒரு தவறான முன்னுதாரணத்தை கொண்டு வந்துவிட்டாரோ என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications