விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம்
சென்னை: தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் இன்று பிரசாரத்தை தொடங்க இருந்தது. பெரம்பூரிலிருந்து விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அரசிடம் பெரிய அளவில் பவர் இருக்காது. அனைத்தையும் தேர்தல் ஆணையம்தான் கண்ட்ரோல் செய்யும். இப்படி இருக்கையில், இதற்கு காரணம் திமுக என்று தவெகவினர் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் அனுமதி மறுப்பு குறித்து விளக்கம் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் தொகுதி அலுவலர்
விஜய் பிரசாரம் மேற்கொள்ள கோரிய இடத்துக்கு, காவல்துறை பரிந்துரைக்காததால் அனுமதி மறுக்கப்பட்டது என பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.கீதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 28) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் சென்னை வடக்கு மாவட்டச் செயலர் வி.சிவா கடந்த 26-ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார்.
பிரசாரத்தின் வழி
அந்த விண்ணப்பத்தில், விஜய் பேசின் பாலத்திலிருந்து தொடங்கி, முல்லை நகர் சந்திப்பு பகுதியில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளவும், அதையடுத்து, அவரது பிரசாரம் அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாகச் சென்று பின் வில்லிவாக்கத்தில் முடிவு பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்துக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் எனவும், சுமார் 20 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் எனவும், அதற்கு அனுமதி வழங்கவும் கோரப்பட்டிருந்தது.
தெருமுனை பிரசாரம்
இந்த விண்ணப்பத்தை எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளருக்கு அனுப்பி பரிந்துரை கோரப்பட்டது. ஆனால், ஆய்வாளர் தரப்பில் முல்லை நகர் சந்திப்பானது தேர்தல் நடத்தும் அலுவலரால் எஸ்.எம்.நகர் 2 -ஆவது பிளாக் சந்திப்பு எனக்குறிப்பிட்டு சிறிய அளவிலான தெருமுனைப் பிரசாரம் நடத்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தவெக சார்பிலான மனுவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதற்கு அனுமதி வழங்க பரிந்துரை செய்ய இயலாது என்றும், பிரசார தெருமுனைக் கூட்டத்துக்கு தவெக சார்பில் வேறு இடம் தேர்வு செய்து மனு அளித்தால் பரிசீலிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பம் நிராகரிப்பு
காவல்துறை அறிக்கையில் முல்லைநகர் சந்திப்பு பகுதியில் 3 ஆயிரம் பேர் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி தடையில்லாச் சான்று வழங்காததால், அவர்களது பரிந்துரையை ஏற்று தவெகவின் பிரசாரம் தொடர்பான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications