கட்சியினர் மீது அதிருப்தி; அப்செட் ஆக்கிய ட்விட்டர்? தீவிர ஆலோசனையில் விஜய்? அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்கள் மீது அதிருப்தியில் விஜய் இருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

கடந்த 1 ஆம் தேதி கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். அந்த வாரம் முழுக்க அதுதான் தமிழ்நாட்டில் முக்கிய செய்தியாக இருந்தது.

Vijay discussion with party members

ஆனால், அதன்பிறகு பெரிய அப்டேட் அந்தப் பக்கத்திலிருந்து எதுவும் இல்லை. மிகப்பெரிய அமைதி நிலவுகிறது. இந்த அமைதி வெளி உலகத்திற்குத்தான். விஜய் அமைதியாக இல்லை என்றே அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி அறிவிப்பு வெளியான சில நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் மட்டும் விலக்கு கேட்டு, தனது கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.

இதுவரை தனது திரை வாழ்க்கையில் படப்பிடிப்புக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறார். காலை 7 மணிக்கு தனக்கு ஷாட் என்றால் அங்கே 6.45க்கு தயாராகப் போய் நிற்பது விஜய்யின் பழக்கமாக இருந்திருக்கிறது.

அதை அவர் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். அப்படி நேரம் தவறக்கூடாது என்பதை அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான் கற்றுத் தந்தார் என்றும் அவர் பேசி இருக்கிறார்.

ஆக, தனது திரைத்துறை வாழ்க்கையில் அவர் படப்பிடிப்பு நடக்கத் திட்டமிட்டுள்ள நாளில் தலையிட்டு, ஒரு நாள் விலக்கு எல்லாம் கேட்டதே இல்லை. ஆனால் இந்த முறை முதன்முறையாக ஒரு விலக்குக் கேட்டு கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இது எதற்காக என்று நாம் விசாரித்தவரை சில தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay discussion with party members

முதல் தகவல், சினிமாவைவிட விஜய் கட்சியில் அதிக அக்கறை காட்டுகிறார் என்பதை உலகத்திற்குச் சொல்வது. அதன்மூலம் கட்சியினருக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பது. அதைப்போல் தன் மேல் நம்பிக்கை கொண்டுள்ள பொதுவான சக்திகளிடம் உள்ள அவநம்பிக்கையை அகற்றுவது. இதற்காகத்தான் இந்த யுக்தி என்கிறார்கள்.

அடுத்துச் சொல்லப்போகும் தகவல் மிகமிக சீரியஸ் ஆனது. அது என்னவென்றால், கட்சி தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றம் என்ன? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஊடகங்களில் கட்சி தொடங்கிய செய்தியை ஒட்டி வெளியான விமர்சனங்கள் என்ன? அதற்கான தங்களின் தரப்பு நியாயங்கள் என்ன? இதை எல்லாம் கூட்டத்தில் ஆலோசித்து இருக்கிறார் விஜய். இதில், விமர்சனங்கள் பற்றி மனம் திறந்து பேசி, உண்மைகள் என்ன என்று கேட்டு இருக்கிறார்.

அடுத்ததாக 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் வைத்ததால், பிறமாநிலத்தில் உள்ள ரசிகர் மன்றங்கள் கொஞ்சம் மன சங்கடத்தில் உள்ளன. கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன் அவர்களிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லையாம்.

கட்சி பெயரில் 'தமிழக' என்று உள்ளதால், வேறு மாநிலத்தில் எப்படி அதன் கிளையை அமைக்க முடியும்? அது அம்மாநில அரசியல் கட்சிகளுக்குள் வெறுப்பை ஏற்படுத்தாதா? ஒரு பொதுத்தன்மையோடு கட்சியின் பெயர் அமைக்கப்பட்டிருந்தால், தாங்களும் இந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் கரை புரண்டு குதித்திருப்போம் என்று தலைமைக்குத் தகவல் சொல்லி இருந்தார்களாம். அதைப் பற்றியும் விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

Vijay discussion with party members

குறிப்பாக , விஜய்க்குக் கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மன்றம் கலைக்கப்பட்டால், என்ன செய்வது? எந்தப் பெயரில் அம்மாநிலத்தில் செயல்படுவது என்பது பற்றி எல்லாம் புஸ்ஸி ஆனந்த்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆகவே அது குறித்தும் காதை கடித்துள்ளார் புஸ்ஸி.

விஜய் பல ஆண்டுகளாகவே கட்சி தொடங்கும் ஆசையுடன் இருந்திருந்தாலும் தக்க தருணத்திற்காக அமைதி காத்து வந்தார். ஆனால், கட்சியின் பெயர் அறிவிப்பு வந்த பிறகு பெரிய அளவில் சினிமா வட்டாரத்தைத் தாண்டி ஒரு பெரும் ஆதரவு நிலவும் என்று நம்பி இருந்துள்ளார் விஜய். ஆனால், அது நடக்கவில்லை.

குறிப்பாக சினிமா சீனியர்கள் யாருமே பெரிய அளவில் விஜய் கட்சி மீது ஆர்வம் காட்டவில்லையாம். ;சிஸ்டம் கெட்டு விட்டது. தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் உள்ளது' என்று டயலாக் பேசிய ரஜினிகாந்த் கூட, விஜய் கட்சிக்குப் பெரிய அளவில் ஒரு ஆதரவு தரவில்லை.

ட்விட்டரிலோ அல்லது வீடியோ மூலமோ அப்படி இல்லை என்றால் ஒரு அறிக்கை வெளியிட்டோ ரஜினி தன் வாழ்த்தை விஜய்க்கு பகிரவில்லை. ஏதோ ஏர்போர்ட் போகும் வழியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் 'வாழ்த்துகள்' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

Vijay discussion with party members

அதைப்போல் கமல்ஹாசன். அரசியலில் புதிய மாற்றம் வரவேண்டும் எனப் பேசும் இவர்கள் விஜய் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தராதது பற்றியும் விஜய் தனது நெருக்கமான ஆலோசகர்களிடம் விவாதித்து இருக்கிறார். கூடவே விஜய்யைத் தொடர்ந்து அஜித் அரசியலுக்கு வருவார் என்று அடிப்பட்ட பேச்சு குறித்துக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார் விஜய்.

வழக்கமாக விஜய்யின் ஒரு படத்தின் லிரிக் வீடியோ வெளியானால் கூட ஒரு மணிநேரத்தில் ஒன் மில்லியனை தொட்டுவிடும். ஆனால் அவர் கட்சியின் பெயரை அறிவித்துக் கிட்டத்தட்ட 15 நாள்கள் ஆகிவிட்டன. அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இப்போது வரை ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர்தான் இணைந்துள்ளனர்.

இந்தளவுக்குத்தான் சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவு கிடைத்துள்ளது. இதை விஜய் எதிர்பார்க்கவில்லை. இப்படி குறைந்தளவிலேயே ஆதரவு கிடைத்துள்ளது குறித்தும் அவர் ஆலோசித்துள்ளார்.

அடுத்ததாக நடந்த ஆலோசனைதான் மிகமிக முக்கியம். கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர்கள் எனச் சிலர் பேசி வருகின்றனர். அவர்கள் ஊடகங்களில் விஜய்தான் அடுத்த முதல்வர் என்று பேசி வருகின்றனர்.

அப்படிப் பேசுபவர்கள் பற்றி, சமூக ஊடகங்களில் சில காணொளிகள் உலவுகின்றன. இன்று விஜய்தான் முதல்வர் என்று பேசி வரும் ஒரு சிலர், முன்பு அண்ணாமலைதான் அடுத்த முதல்வர் என்று பேசியுள்ளனர்.

Vijay discussion with party members

அப்படிப்பவர் இந்த அணிக்கு வந்துள்ளதால், விஜய் கட்சி பாஜகவின் 'பி' டீம் தான் என்பது உண்மையாகி உள்ளது என்றும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஆக, கட்சியில் செய்தித் தொடர்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீது எழுந்துள்ள விமர்சனத்திற்கு எல்லாம் விளக்கம் கேட்டுள்ளார் விஜய். கூடவே அவர்களைப் பற்றிய ட்ராக் ரெக்கார்ட்டை தனி ஃபைலாக தயாரித்துக் கொடுக்கும் ஒரு அசைன்மெண்ட்டை ஐடி விங்க் ஆட்களுக்கு கொடுத்துள்ளாராம்.

இப்படித் தொடர்ந்து நடைபெற்று வரும் சின்ன சின்ன ஆலோசனைக் கூட்டங்களில், தனக்குக் கிடைக்கும் தகவல்கள் குறித்து விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே உள்ளாராம் விஜய்.

விஜய் கட்சிக்குப் பின்னால் அரசியல் வியூகங்களை வகுக்கக் கூடிய பிரசாந்த் கிஷோர் மாதிரி ஒரு ரோல் செய்பவராக ஜான் அலெக்சாண்டர் என்பவர்தான் இருக்கிறார் என்கிறார்கள்.

இவருடன் அடிக்கடி ஆலோசனை நடத்துகிறார் விஜய். இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே விஜய் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசித்து வந்துள்ளார்.

இவரைத் தமிழ்நாட்டில் சந்தித்தால் விசயம் லீக் ஆகிவிடும் என்பதால், ஹைதராபாத்தில் வைத்துச் சந்திப்பதை வழக்கமாக வைத்து வந்துள்ளார் விஜய்.

ஆனால், ஜான் அலெக்சாண்டர் ஜாதகத்தை ஊடகங்கள் மோப்பம் பிடித்துவிட்டன. அதில் விஜய்க்கு வருத்தமாம். ஆகவே அது பற்றிய மேலிட நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் இந்த விசயத்தில் 'குறி'வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

இதற்கு எல்லாம் மேலாக ஊடகங்களில் அரசியல் கருத்துகளைப் பேசிவரும் பத்திரிகையாளர்களிடம் விஜய் ஐடி விங்க் டீம் டீலிங்க் பேசி வருகிறதாம். முழு நேரமாக தங்களின் கட்சிக்கு ஆலோசனை வழங்கவும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க பாயிண்டுகளை அள்ளி வழங்கவும் இவர்களை வேலைக்கு அழைத்து வருகிறார்களாம்.

விரைவில் மிகப்பெரிய டீம் செட் பண்ணும் வேலைகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஈடுப்பட்டு வருவதாகத் தகவல் கசிந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+