சிறுநீர் கழிக்க கூட கண்டிஷன்.. விஜய்யை பார்க்க போனவர்களுக்கு நேர்ந்த அவலம்! இத்தனை கட்டுப்பாடுகளா!
சென்னை: "பாத்ரூம் போகனும்னா கூட.. நம்ம சொல்ற இடத்துல நிறுத்த மாட்டாங்க. அவங்களா நிறுத்துற இடத்துலதான் போக முடியும்" என விஜய்யை பார்க்க அழைத்து செல்லப்பட்டவர்கள் ஏகப்பட்ட கண்டிஷன்கள் உடன் அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் சம்பவத்தில் உயிர்களை பலி கொடுத்த குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. கேட்டால், நாங்கள் விதித்த நிபந்தனைகளுடன் அனுமதி கிடைக்கவில்லை என்று தவெகவினர் கூறுகின்றனர். பிரதமருக்கு கூட இப்படி பாதுகாப்பு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை, கவுன்சிலராக கூட இல்லாத விஜய்க்கு எப்படி, இத்தனை நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்க முடியும்? என தவெகவினருக்கு பதில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்நிலையில், உயிர்களை இழந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு அழைத்து விஜய் நேரில் ஆறுதல் கூறியிருந்தார். இதுவும், விஜய்யை சந்திக்க அழைத்து செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்கப்பட்டதும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளியாட்களோடு பேசக்கூடாது, சொல்லாமல் வெளியில் எங்கும் செல்லக்கூடாது, விஜய்யை சந்தித்த உடன் நாங்களே அழைத்து சென்று ஊரில் விட்டுவிடுவோம், நாங்கள் நிறுத்தும் இடத்தில்தான் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிக்க இறங்க வேண்டும், போன்ற கண்டிஷன்கள் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவே, அவர்கள் மனதில் இருக்கும் சோகத்தை பகிர்ந்துக்கொள்ள சக மனிதன் தேவை என்பதுதான். ஆனால், வெளியாட்களிடம் பேசவே கூடாது என்று சொல்வதெல்லாம் தனியுரிமை மீறலாக இருக்கிறது.
வெளி சமூகத்துடன் தொடர்பே கூடாது எனில்.. விஜய் என்ன சிறைச்சாலையிலா இருக்கிறார்? அவரை பார்க்க சிறைக்குள் சென்று வரவா பாதிக்கப்பட்ட மக்கள் வந்தார்கள்? இயற்கை உபாதைகளை கழிக்க கூட, தவெகவினர் சொல்கிற இடத்தில்தான் வண்டி நிற்கும் எனில், இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா? ஒருவேளை சர்க்கரை நோயாளி பேருந்தில் இருந்தாலும் அவருக்கும் இந்த நிபந்தனைகள் பொருந்துமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
எங்கு போகிறோம் என்று கூட தெரியாமல், விஜய்யை பார்க்க என மொட்டையாக உறவினர்களிடம் சொல்லிவிட்டுதான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கே விஜய் மாமல்லபுரத்தில் எங்கு இருக்கிறார் என தெரியாது. இந்த கட்டுப்பாடுகள் மனதளவில் உடைந்த மக்களை இது மேலும் மனதளவில் பாதிக்கவில்லையா? பிரதமரை பார்க்க போனால் கூட இவ்வளவு கட்டுப்பாடுகள் கிடையாதே!
அதேபோல விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த நிகழ்வில் பத்திரிகையாளர்கள் ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லை. உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் விஜய் உயிர்களை பலி கொடுத்த பெற்றோரின் கால்களில் விழுந்து, கதறி அழுது மன்னிப்பு கேட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆயினும் அதற்கு உறுதியான ஒரே ஒரு புகைப்படம் கூட ஆதாரமாக வெளியாகவில்லை.
சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல, துயரத்திலிருந்து வெளிவந்துக்கொண்டிருப்பார்கள். ஆறுதல் சொல்வதெனில் ஒருமாதம் கழித்துதான் சொல்வாரா விஜய்? சம்பவம் நடந்த பகுதிக்கு முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் போய் வந்திருக்கிறார்கள். விஜய் மட்டும் இன்னும் நேரில் போகவில்லை. மட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர் தன் இடத்திற்கு அழைத்து ஆறுதல் சொல்வதெல்லாம், ஆறுதலே கிடையாது.. பக்கா அரசியல் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.












Click it and Unblock the Notifications