பண்ற தப்பையெல்லாம் விஜய் செய்துவிட்டு.. பழி மட்டும் திமுக மீதா? எழும் விமர்சனங்கள்
கரூர்: நடிகர் விஜய் தலைமையிலான கட்சி அரசியல் பயணம் மேற்கொண்ட போது, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த நிகழ்வில் ஏற்பட்ட பல சிக்கல்களுக்கு காரணம் திமுக என்று விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சதி இருப்பதாக தவெக நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆனால் உண்மையில், பல தவறுகள் விஜய் தரப்பிலேயே நடந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இது தொடர்பாக திமுகவினர், பிற கட்சியினர், பொதுமக்கள், சமூக வலைத்தளங்களில் விஜய் குறித்து சில முக்கிய கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

விஜயின் முக்கிய தவறுகள்
- நேரத்திற்கு வராமல் தாமதித்தது - மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். இந்த தாமதம் கூட்டத்தை அதிகரித்தது. ஜப்பான்காரர்கள் நேரம் தவறாமைக்கு உதாரணம். அந்த நாடு முன்னேறிவிட்டது. பிரதமர் மோடி கூட நேரம் தவறாமையை பெரும்பாலும் கடைபிடிக்கிறார். ஆனால், எந்த அரசு அலுவலும் இல்லாத விஜய் நேரம் கடத்தி கூட்டத்திற்கு வருவது தனது ரசிகர்களை தானே கொடுமை செய்வதற்கு சமம்.
- தண்ணீர், உணவு வழங்காமை - வெயிலில் நின்ற ரசிகர்களுக்கு குறைந்த பட்சமாக தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதிமுக கரூரில் நடத்திய கூட்டத்தில் தண்ணீர் கொடுத்து உபசரித்திருந்தனர் என்பது களத் தகவல். ஆனால் அடுத்ததாக நடந்த தவெக கூட்டத்தில் யாரும் பொறுப்பை எடுத்து எந்த வசதியும் செய்து தரவில்லை.
- மக்கள் மயங்கி விழும் நிலையிலும் உரை தொடர்ந்தது - கூட்டத்தில் பலர் மயங்கிக் கிடந்தும் உரையை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பது பெரும் மனிதாபிமான குறையாகும். வீடியோ ஆதாரங்கள் இது தொடர்பாக வந்து பார்ப்போரை கலங்க வைத்தன.
- உயிரிழப்பு செய்தி வந்ததும் இடம் விட்டு சென்னை சென்றது - கூட்டத்தில் உயிரிழப்பு நிகழ்ந்தபின் அங்கிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறாமலே கிளம்பிச் செல்வது மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறைந்தபட்சம் திருச்சியில் தங்கியிருக்கலாம். அல்லது தவெகவினரை உதவி செய்யுமாறு கேட்டு வீடியோ வெளியிட்டிருக்கலாம். ஏதோ பேஷன் ஷோ வந்துவிட்டு போனதை போல அலட்சியமாக போனது மனிதாபிமானம் உள்ளவர்கள் செய்யும் செயல் அல்ல. இது தவிர, மின்சாரத்தை துண்டிக்க கேட்டது தவெக ஆனால் பழி சுமப்பது திமுக, தவெக கேட்ட இடத்தைவிட பெரிய இடமாக கொடுத்தும் பழி சுமப்பது திமுக என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எதிர்காலத்துக்கு எச்சரிக்கை
ஒரு தலைவராக மக்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அடிப்படை ஏற்பாடுகளில் தவறுகள் நடக்கக் கூடாது. தாமதம், அலட்சியம், மனிதாபிமானமின்மை போன்றவை ஒரு அரசியல் பயணத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கரூர் சம்பவம் விஜய்க்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து யார் மீது தப்பு சொல்லலாம் என அலைவது இன்னும் அந்த கட்சி பாடம் கற்கவில்லை என்பதை உறுதி செய்கிறது. விஜயகாந்த் கட்சி நடத்தியபோது தனது தொண்டர்களையே தொண்டர் படையாக யூனிபார்ம் கொடுத்து மாற்றி வைத்து கூட்டத்தை ஒழுங்கு செய்வார். ஆனால் இங்கு ஒழுங்கு செய்ய வேண்டியவர்களே எந்த மரம் உயரமாக இருக்கும். ஏறி உட்கார்ந்து விஜயை பார்க்கலாம் என்றுதானே இருந்தனர். இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் திமுகவினரும், பிற கட்சியினரும்.
மொத்தத்தில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த அதே, "ஐயோ பாவம்ல அவுங்க" என்ற பிம்பம் விஜய்க்கும் கிடைக்கிறது. ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றாலும், எந்த வழக்கிலும் தண்டனை பெறாத கருணாநிதியை ஊழல்வாதி என்று கூறி மட்டம் தட்டும் அதே மனநிலைதான், இப்போதும் தொடர்கிறது. திரையுலகில் இருந்து வந்தவர்கள் என்ற என்ன தப்பு செய்தாலும், அல்லது திமுகவை எதிர்ப்பவர்கள் என்ன தப்பு செய்தாலும் அது, இதுபோல 41 பேரின் உயிர் தொடர்பானதாக இருந்தாலும், முட்டு கொடுப்போம் என்பது, மோசமான மனநிலை என்பது திமுகவினர் ஆதங்கமாக உள்ளது.












Click it and Unblock the Notifications