நாடகம் விடும் வேளை தான்.. இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! விஜய் முன் மிகப் பெரிய சவால்!
சென்னை: தமிழக அரசியலில் மிக முக்கியமான நாளாக இன்று மாறியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு மிகப்பெரிய 'அரசியல் சோதனையாக' பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை அவர் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருக்கும் நிலையில், திடீர் ட்விஸ்ட் நடந்தால், அவருக்கு சிக்கல் தான் ஏற்படும் என்கின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை கிடைக்கவில்லை.

இதனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் விஜய் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், அந்தக் கட்சிகள் அளித்த ஆதரவின் அடிப்படையில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
தவெக அரசு
தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்றதாலே ஆட்சி உறுதியாகிவிட்டது என்று சொல்ல முடியாது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே அரசு முழுமையாக நிலைநிறுத்தப்படும். அதற்காகத்தான் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
முதல்வர் விஜய்
தற்போதைய சூழலில் தவெகவின் நிலை மிகவும் நெருக்கடியானதாகவே உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதனால் தவெகவின் எம்.எல்.ஏ எண்ணிக்கை 107 ஆக குறைந்துள்ளது. இதில் சபாநாயகராக தேர்வாகியுள்ள ஜேசிடி பிரபாகர் வாக்கெடுப்பில் பொதுவாக கலந்து கொள்ள மாட்டார். இதனால் நேரடி வாக்கு எண்ணிக்கை மேலும் குறைகிறது.
தமிழக சட்டசபை
இந்நிலையில், காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 என கூட்டணி ஆதரவுடன் தவெக தரப்பில் மொத்தம் 120 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், காங்கிரஸைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் "வெளியில் இருந்து ஆதரவு" என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளன. இதுவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் யார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பிரச்சினை, சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியின் நிலைப்பாடு போன்றவை அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பு பொதுவாக மூன்று விதமாக நடத்தப்படலாம். குரல் வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பு மற்றும் மின்னணு வாக்கெடுப்பு ஆகியவை அதில் அடங்கும். பெரும்பாலான நேரங்களில் குரல் வாக்கெடுப்பே நடைமுறையில் இருக்கும். உறுப்பினர்கள் நேரடியாக ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
சபாநாயகர்
மேலும், சட்டப்பேரவைக்கு வராத உறுப்பினர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். உதாரணமாக சில எம்.எல்.ஏக்கள் வராமல் இருந்தால், அன்றைய தினம் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே பெரும்பான்மை கணக்கிடப்படும். இந்த வாக்கெடுப்பில் சபாநாயகர் சாதாரணமாக வாக்களிக்க மாட்டார். ஒருவேளை ஆதரவு மற்றும் எதிர்ப்பு வாக்குகள் சமமாகிவிட்டால் மட்டுமே சபாநாயகர் தனது தீர்மான வாக்கை பயன்படுத்துவார்.
தமிழக அரசியல்
இன்று நடைபெறும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு, விஜய் தலைமையிலான அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை பெரும்பான்மை நிரூபிக்க முடியாவிட்டால், முதலமைச்சர் பதவி ஆபத்துக்குள்ளாகும் சூழல் உருவாகும். அடுத்ததாக ஆளுநர் மற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதுவும் சாத்தியமாகாத நிலை ஏற்பட்டால், மாநிலத்தில் அரசியல் குழப்பம் மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. இதனால், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications